5 ஆயிரம் ரூபா மக்களுக்கு கிடைக்குமா? இம்ரான் மஹ்ரூப் (பா.உ)

(ஹஸ்பர் ஏ ஹலீம்)கொரோனா 3 வது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கொடுப்பனவின் போது உண்மையில் 5 ஆயிரம் ரூபா மக்களின் கைகளுக்கு கிடைக்குமா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா 3 வது அலையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குதல் என்ற தலைப்பில் பிரதமர் அலுவலகத்தினால் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவு பெறத்தகுதியுள்ள மக்கள் ஏற்கனவே சமுர்த்தி போன்ற ஏதாவது கொடுப்பனவு பெற்று வருவார்களாயின் அந்தக் கொடுப்பனவுக்கும் 5ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையே மக்களின் கைகளுக்கு வந்து சேரும் வகையிலேயே இந்தச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு குடும்பத்தினர் மாதம் 2500 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு பெறுவார்களாயின் அரசாங்கம் குறிப்பிடும் 5 ஆயிரம் ரூபாவிலிருந்து இந்த 2500 ரூபா கழித்து மிகுதி 2500 ரூபா மட்டுமே மக்களின் கைகளுக்கு வந்து சேரும்.

முதியோர் கொடுப்பனவுஇ பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு போன்ற கொடுப்பனவு பெறுவோர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாவிலிருந்து அவர்கள் பெறும் தொகையைக் கழித்து வரும் மிகுதித் தொகையே வழங்கப் படவுள்ளது.

புற்றுநோய்இ தலசீமியா தொழுநோய்இ காசநோய் போன்ற நோய்களுக்கான கொடுப்பனவு பெறும் சகலருக்கும் இதே அடிப்படையிலேயே இந்தக் கொடுப்பனவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா பாதிப்புக்காக எனச் சொல்லப்படும் 5 ஆயிரம் ரூபா அரசினால் வழங்கப் படப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. 5 ஆயிரம் ரூபா வழங்குவதாக பிரச்சாரம் செய்து அவர்கள் ஏற்கனவே பெறும் உதவித் தொகைகளை அதிலிருந்து வரும் மிகுதித் தொகையே அரசு வழங்கவுள்ளது.

இந்த அரசு மக்களை எப்படி ஏமாற்றுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணம். 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த தொகை மக்களின் கைகளுக்கு கிடைக்கவுள்ளபோது ஏன் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு என்ற பிரச்சாரத்தை அரசு செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

இலங்கை மக்கள் ஆசியாவில் கல்வி அறிவு கூடிய மக்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான போலிப் பிரச்சாரங்களால் அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசு விளங்கிக் கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.