பயணக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத மக்கள்.

(வி.சுகிர்தகுமார்)பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது.

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியிலும் நேற்று காலை வேளையில் மக்கள் வாகனங்கள் மற்றும் மக்களின் நடமாட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் அவசியமற்ற முறையில் நடமாடுவோர் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியதுடன் சிலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நடவடிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1332 ஆக உயர்வடைந்துள்ளதுடன்; கல்முனை பிராந்தியத்தில் 198 ஆக தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் வழங்கும் பணியும் பிரிவுகள் ரீதியாக பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றது.

மேலும் குறித்த மக்களது அவசர தேவைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக 0719114417 எனும் தொலைபேசி இலக்கமும் பிரத்தியேகமான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான முன்னாயத்த பணிகளும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.