திருகோணமலை  கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் தமக்கு அரசினால் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் தமக்கு அரசினால் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் கந்தளாய் பேராறு பகுதியில் வசிக்கும் மக்கள் தமது தொழில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
 நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் காரணமாக கந்தளாய் பிரதேசமும் முடக்கத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது,
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற எந்தவிதமானஉதவிகளோ நிவாரண செயற்பாடுகளோ தமக்கு கிடைக்க வில்லையெனவும்,அரச ஊழியர்கள் தம்பை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
அன்றாட கூலித்தொழில்களை மேற்கொண்டு வரும் நாம் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு பிள்ளைகளுடன் கஷ்டத்திற்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நாளாந்த கூழித்தொழிலை நம்பி வாழும் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தமது ஆதங்கத்தினை தெரிவிக்கின்றார்கள்.
கந்தளாயில் பேராற்றுவெளி,பேராறு,மத்ரஸா நகர்,ரஜஎல,இரண்டாம் குலனி மற்றும் வட்டுக்கச்சி போன்ற பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது,இருப்பினும் இப்பகுதி மக்களுக்கு இது வரை எந்தவிதமான உலருணவுப் பொருட்களும் கிடைக்கவில்லையென இப்பகுதிகளில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தமது நோய்க்கான மருந்துகளை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும்,மருந்தகங்களில் பெறுவதற்கு கையில் பணம் இல்லைனவும் கந்தளாய் பேராறு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு உலருணவுப் பொதிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.