புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் கௌரவ பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு

(அப்துல்சலாம் யாசீம்)

கொழும்கு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

கங்காராம விகாரைக்கு வருகைதந்த கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரிவெனா கல்வி கற்கும் இளம் பிக்குமார் 100 பேருக்கு புலமைப்பரிசில் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதன்போது, ‘சாமனேரு காப்புறுதி’ என்ற உதவித்தொகை வழங்கலை குறிக்கும் வகையில் கௌரவ பிரதமர் இளம் பிக்குவிற்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களும் இந்த உன்னத நிகழ்வில் பங்கேற்றார்.

கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அவர்கள் இதன்போது அனுசாசனமொன்றை நிகழ்த்தினார். வெசாக் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அவர் கொவிட்-19 தொற்றின் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் இம்முறை புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு அதனை பார்வையிடுவதற்கு முடியாதுள்ளது எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கௌரவ பிரதமர் கங்காராம எல்லை அருகே புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில், அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் வல்பொல பியனந்த தேரர், மாத்தறை ஹிந்தெடிய ரஜமஹா விகாரை மற்றும் கொட்டாவ மாலபல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம அதிபதி மற்றும் முன்னாள் மேல் மாகாண பிரிவெனா கல்வி இயக்குநர், அக்ரஹேர கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.