சுவிற்சர்லாந்தில் வரும் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது!

நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. பொதுவிழாக்கள் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.

ஆடவைத் திங்கள் (யூனி 2021) நிறைவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

26.05.21 புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் சுவிற்சர்லாந்து நடுவனரசின் நல்வாழ்வு (சுகாதாரத்துறை) அமைச்சர் திரு. அலான் பெர்சே அரசின் நோய்த்தடுப்பு வழிமுறை உரிய நற்பலனை அளித்திருப்பது தமக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்: கடந்த நாட்களில் ஒருபகுதி தளர்வுகளை சுவிஸ் அரசு அறிவித்தபோதும், புதிய தொற்றுக்களின் தொகை இறக்கக்கோணமாகவே உள்ளது. இதன் பொருள் கடந்த நாட்களின் சுவிசரசின் செயற்பாடுகள் உரிய நற்பலனை அளித்துள்ளது என்பதாகும். «எங்கள் கூற்றின்படி நாம் எமது வழியில் மேம்பட்டுவருகின்றோம், ஆனால் பாதையின் முடிவை இன்னும் அடையவில்லை» ஆதலால் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்போம் என்றார்.

கடந்த புதன்கிழமை மாநில அரசுகளுடன் சுவிற்சர்லாந்து நடுவனரசு ஆழமான விரிவான கலந்தாய்வுகளையும் கருத்துப்பகிர்வுகளையும் ஆற்றியிருந்தது. இதன் பெறுபேறாக நிலைப்புள்ள பொருளாதாரத்தை உறுதிசெய்யவும் மேலும் தளர்வுகளை மாநில அரசுகள் கோரியிருந்தன. நடுவனரசும் மாநிலங்களின் பல்வேண்டுகைகளுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

பெரும்பாலான மாநிலங்கள் விரைவாக மகுடநுண்ணி (கோவிட்-19) நோய்தொற்றுக்கு ஆளாகக்கூடிய மூதாளர்களுக்கும், முன்னர் நோயிற்கு ஆட்பட்டு அதனால் நலிந்த மறையிடர் ஆட்களுக்கும் முழுமையாக தடுப்பூசியினை இட்டு முடித்துள்ளது. ஆகவே இப்போது அனைத்து தரப்பினர்களுக்கும் மகுடநுண்ணித் தொற்றுத்தடுப்பூசிகள் இடப்பட்டு வருகின்றது. இது நிலைப்பாடுறுதல் நிலையாகும், இந்நிலையில் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி இடுவது என்பது நோக்கமாகும் எனவும் ஊடகவியலாளர் கூடலில் அறிவிக்கப்பட்டது.

31.05.21 முதல் இத்தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன:

விருந்தோம்பல் துறை:

31.05.21 திங்கட்கிழமை முதல் உணவகங்களின் உள்ளறைகளிலும் உணவு உண்ண ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. ஒரு மேசையில் 4 இருக்கைகள் இடப்படலாம். வெளியரங்கில் ஒரு மேசைக்கு 6 இருக்கைகள் இடப்படலாம். அனைத்து விருந்தினர்களும் தமது தரவுகளை பதிவுசெய்ய வேண்டும். உணவு உண்ண இருக்கையில் இருந்தபின்னரே முகவுறையை கழற்றிக்கொள்ளலாம். இரவு 23.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை கடந்த 5 மாதங்களாக உணவகங்களுக்கு முடக்கநேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தடையும் நீக்கப்படுகின்றது.

தனி ஆட்கள் ஒன்றுகூடல்கள்

உள்ளறைகளில் ஆகக்கூடியது 30 ஆட்கள்வரை ஒன்றுகூட ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. வெளியரங்கில் ஆகக்கூடியது 50 ஆட்கள் ஒன்றுகூடலாம். தனியார் விழாக்கள் எடுத்துக்காட்டாக திருமணம் அல்லது பிறந்தநாள்விழா எனின் வெளியிடத்தில் ஆகக்கூடியது 50 விருந்தினர்கள் பங்கெடுக்க ஒப்புதல் அளிக்கப்படுகின்றது.

நிகழ்வுகள்

திங்கட்கிழமைமுதல் பொது நிகழ்வுகள் உள்ளரங்கில் 100 ஆட்களுடனும், வெளியரங்கில் 300 பார்வையாளர்களைக்கொண்டும் நடைபெறலாம். உள்ளரங்கின் பரப்பளவு 200 ஆட்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டுமே 100 ஆட்கள் உள்ளுக்குள் இருக்கலாம். இவ்விதியே சமய வழிபாடுகளுக்கும் விழாக்களுக்கும் பொருந்தும்.

விளையாட்டு மற்றும் பண்பாடு

தொழில்சாராத 50 விளையாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடலாம். இவ்விதி விளையாட்டினைக் கற்றுக்கொள்வோருக்கும் பொருந்தும். வெளியரங்கில் குழுவிசை நிகழ்வுகள் நடைபெறலாம். சுடுநீர்த்தடாகங்கள் மற்றும் நலவாழ்வுக்குளியல் நிலையங்கள் மீண்டும் திறந்துகொள்ளலாம்.

நேரில் வகுப்பு

உயர்பாடசாலைகளில் மற்றும் வயதுவந்தவர்களுக்கான கல்விநிலையங்களில் நேரில் தோன்றிக் கல்வி கற்பதற்கு இதுவரை அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்கள் தொகைக்கான வரையறை என்பன நீக்கப்படுகின்றன. தொடர்ந்தும் உரிய பாதுகாப்பு அமைவு மற்றும் பரிசோதனைமுறைமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் மற்றும் இம் முறைமைகளுக்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

தொற்றுத்தடைக்காப்பு

நோயிலிருந்து நலன் அடைந்தோர்களுக்கு பயணங்களில் தொற்றுத்தடைக்காப்பாக தனிப்படுத்தலில் இருந்தும், தம் தரவுகளைப் சுகாதாரத்துறையிடம் பதியவேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்தும் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்ப்படுகின்றது. இவ்விதி தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கும் பொருந்தும். முழுமையான தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் பயணங்களில் இருந்து மீண்டும் நாடு திரும்புகையில் தமது தரவுகளைப் பதிவுசெய்யத் தேவையில்லை. ஆனால் மிகுந்த பெருந்தொற்று நாடுகளில் இருந்து மீண்டும் நாடுதிரும்புவோர்கட்கு இவ்விதி பொருந்தாது.

வீட்டிலிருந்தபடி பணி

முறைப்படி தொடர்ச்சியாக மகுடநுண்ணிப் விரைவுப்பரிசோதனை செய்யும் நிறுவனங்கள் தமது பணியாளர்களை பணியகங்களில் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொள்ளலாம். வீட்டில் இருந்தபடி பணி என்பது இப்போது முன்மொழிவாக மட்டும் அறிவிக்கப்படுகின்றது.

தொகுப்பு: சிவமகிழி