இலங்கையின் பல பகுதிகளில் மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்

நேற்றைய தினம் வட மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட மிகவும் வலுவடைந்த சூறாவளியானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12km/h வேகத்தில் நகர்ந்து தற்போதும் வட மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது PARADIP நகரிலிருந்து கிழக்காக 90 கிலோ மீற்றர் தூரத்திலும்,
BALASORE நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 140 கிலோமீற்றர் தூரத்திலும்,
DIGHA நகரிலிருந்து தெற்காக 130 கிலோமீற்றர் தூரத்திலும்,
DHAMRA தீவிலிருந்து கிழக்கு-தென் கிழக்காக 85 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இந்த சூறாவளியானது  வடக்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து வட ஒரிசா மாநிலத்திற்கு அருகில் DHAMRA PORT  கரையோரத்திற்கு அருகில் இன்று காலை அண்மித்து, இன்று 11.30am – 01.30pm இற்கும் இடைப்பட்ட மணியளவில் வடக்கு வட ஒரிசா மாநிலத்திற்கு அருகில் வட DHAMRA இற்கும் தெற்கு BALASORE இற்கும் இடையில் மிகவும் வலுவடைந்த சூறாவளியாக (Very severe Cyclonic Storm) ஆக ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இன்று (26.05.2021) காலை 05.30 மணிக்கு கொழும்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில்
வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த சூறாவளி காரணமாக மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை இக் கடல் பிராந்தியத்தில்  துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் காலி மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடையிடையே மழை காணப்படுவதுடன்,
சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சிறிதளவான மழை காணப்படும்.
இலங்கையின் பல பகுதிகளில் மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன், இந்த காற்றின்  வேகமானது இலங்கையின் மத்திய மலை பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்  மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
எனவே பொதுமக்கள் இந்த கடும் காற்றினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தகவல்
க.சூரியகுமாரன்
ஓய்வுபெற்ற சிரேஸ்ட வானிலை அதிகாரி.