தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்

தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(15) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது.சாய்ந்தமருது நகர சபையை பெறுவதற்காக பலரும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.இதற்கு ஒருவர் மாத்திரம் உரித்தானவர்கள் அல்லர் பலரும் செயற்படுகின்றனர்.பொதுவாக மக்கள் இருக்கின்றார்கள்.கல்முனை மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு சாய்ந்தமருதுவிற்கு சபை கிடைக்க வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கின்றார்கள்.இது தான் நியாயம் தர்மம்.இந்த அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் எங்களுடைய முஸ்லீம் பகுதிகளுக்கு சபை கிடைக்க வேண்டும்  என பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.

அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் இது தொடர்பில் சந்தித்திருந்தார்.அதனை சுட்டிக்காட்டியவர்களும் உள்ளனர்.அவ்வாறு சுட்டிக்காட்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாமா என்ற யோசனைக்கும் வந்துள்ளார்கள்.ஆகவே இது தான் யதார்த்தம்.பிரிந்து  எதனையும் சாதிக்க முடியாது.தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இதனை ஒரு மேசையில் இருந்து பேசி தமிழ் மக்களுக்கான பிரச்சினையை தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினையை முஸ்லீம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதே போன்று தான் கல்முனை பிரதேச செயலக விடயத்தை கோடீஸ்வரன் அவர்கள் பேசியிருந்தார்.அதற்கு பாடுபட்டும் இருந்தார்.இதற்கு சுமூகமாக எல்லைத்திட்டத்தை வகுக்கின்ற போது அது தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகமாக அமையாது.இப்பிரதேச செயலகத்தை அண்டிய பகுதிகளில் மருதமுனை நற்பிட்டிமுனை மக்களும் இருக்கின்றார்கள்.ஆகவே எனக்கு இன ரீதியான பிரதேச செயலகம் வருவதற்கு உடன்பாடில்லை என்பதே எனது கருத்தாகும் என குறிப்பிட்டார்.