சாணக்கியனின் உரையில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை பாதிக்கும் எந்தவிடயமும் இல்லை.இம்ரான் மஹ்ரூப் பா.உ

பைஷல் இஸ்மாயில் –

கடந்த மே 04ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உரையில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை பாதிக்கும் இரு இனங்களுக்கிடையில் பாரிய பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எந்த அம்சங்களும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

தமிழ் முஸ்லிம் மக்களின் இன நல்லுறவை பேணி வந்த இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாராளுமன்ற உரை இரு இனங்களுக்கிடையில் பாரிய பிரிவினவாதத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்குமா என அவரிடம் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாறாக சமூக வலைத்தளங்களில் அதிகமான முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் அவரது உரையை பாராட்டி பகிர்ந்ததையே காணமுடிந்தது. அவர் தமிழ் சமுகத்தின் குரலாக ஒலிப்பதே தேவையாக இருந்த நிலையில் தனது பன்முக ஆளுமையால் அதற்கும்  மேலாக மொத்த சிறுபான்மைக்குமான குரலாக தன்னை பதிவுசெய்துள்ளார். தமிழர் என்ற காரணத்தால் அவர் முஸ்லிம் சமூகத்தின் விலைபோன பிரதிநிதிகளை விமர்சித்தமை இரு இனங்களுக்கிடையில் பாரிய பிரிவினவாதத்தை கொண்டுவரும் என்பது ஏற்புடையதல்ல.

அவர் அரசாங்கத்தின் இனவாத முகத்தை தோலுரித்தார். முஸ்லிம் சமூகத்தின் பாரிய பிரச்சினைகளாக அண்மைய நாட்களில் அடையாளம் காட்டப்பட்ட ஜனாஸா எரிப்பு, புர்கா, மத்ரஸா உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மௌனம் காத்த 20 ஆம் திருத்தத்துக்கு விலைபோனவர்களை விமர்சிப்பதால் இன நல்லுறவு பாதிக்கப்படாது.

உண்மையில் இன்று  குறிப்பாக கிழக்கில் முஸ்லிம் மக்கள் இந்த அரச சலுகைகளுக்கு விலைபோய் நேற்று இருபதுக்கும் நாளை துறைமுக நகர் சட்டத்துக்கும் அரசுக்கு சார்பான கைதூக்கிகள் குறித்து மிகத்தெளிவாகவே உள்ளனர். எதிர்காலத்தில் அரசியல் வங்குரோத்து நிலையை அடைபவர்கள் இரு இனங்களையும் பிழையாக உணர்வூட்டி தாமறிந்த இனவாத அரசியலை மேற்கொள்ள தலைப்படுவார்கள்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை விளங்க வேண்டும். தமிழ் மக்களதும் முஸ்லிம்களதும்  அரசியல் அபிலாஷைகளில் பரஸ்பரம் ஒற்றுமை கொண்ட அம்சங்கள் இருப்பதுபோல முரண்பாடானவைகளும் உள்ளன. அந்த இடங்களில் அந்தந்த சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்வோர் முரண்பாடான அம்சங்களில் தம் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதே தர்மம் எனலாம்.  நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு அநீதிக்கெதிராக குரல்கொடுக்கும் சாணக்கியன் போன்றவர்களது நியாயமான, அரச அநீதிக்கெதிரான குரல்களை ஆதரித்து விலைபோகாத சிறுபான்மை உரிமை அரசியலை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தும் எதிர்பார்ப்பும் ஆகும் என்றார்.