மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் அவர்களில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து 05 ஆம் திகதி அதேபிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் 199 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 06 பேருக்கு தொற்று உறுதிப்பட்டிருந்தது.

06 ஆம் திகதி உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கலாக 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 02 பேருக்கும் அவர்களது உறவினர்கள் 04 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க தமது பிரதேச செலயக உத்தியோகஸ்த்தர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக கடந்த 05 ஆம் திகதி முதல் தமது பிரதேச பொதுமக்களுக்கான அரச சேவைகளை தற்காலிகமாக மறு அறிவித்தல்வரை வழங்க முடியாமலுள்ளது என பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

எனவே மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 ஆம் திகதி முதல் அரச சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.