‘கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்’ மட்டக்களப்பில் புது மனை புகு விழா.

(ருத்ரன் வாழைச்சேனை)
‘கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்’  என்ற   தொணிப்பொருளில்  புது மனை புகு விழா மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்றது.
சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தமிழர் கலாச்சாரத்தினை பின்பற்றி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக இன்று காலை சுப வேளையில்  மாவிலை தோரணம் கட்டியும். குருத்து கட்டியும் பால் காச்சி பொங்கல் இட்டும் தாங்கள் வாழ நினைக்கும் வீடுகளுக்குள் குடி போகும் முகமாக குடி மனை குடி போதல் நிகழ்வினை நடாத்தினார்கள்.
அத்துடன் புதிய கிணறுகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மக்கள் தாங்கள் குடியிருக்கும் குறித்த கிராமத்திற்கு  பெயர் சூட்டும் முகமாக காணி நன்கொடை செய்தவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது பெயரிலே ‘லவன் எழுச்சி கிராமம்’; என பெயர் நாமமும் சூட்டினார்கள்.
 மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத நிலையில் வாழும் குடும்பங்களுக்கு புது வருட தினமன்றுகிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் வைபவ ரீதியாக பயனாளிகளுக்கு காணி உறுதி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
 உறுதி ஆவணங்களை பெற்றுக் கொண்டோர் தங்களுக்கு சொந்தமான காணியில் குடிசை வீடுகளை அமைத்து குடியிருக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
கிரானிலுள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் என்பவரே தமக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் காணியினை 224 பேருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கி வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில்  வறுமமை நிலையில் வாழும்,வாடகை வீட்டில் உள்ளோர்.மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்வு கருதி இவ் காணி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பயணாளிகளின் பிள்ளைகளின் கல்வி,  மேம்பாடு,பொருளாதாரம் விருத்தி கருதி இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக நண்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார்.
இதில் பொது தேவைகளான மத ஆலயம்,பாடசாலை,போன்றவற்றிக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன் குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை, வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது செயலை மாவட்டத்தில் பலரும் பாராட்டினார்கள்.