தேசியத்தலைவரையே ஏமாற்றியவருக்கு 30ஆயிரம் தமிழ்மக்களை ஏமாற்றுவதென்பது ஒருவிடயமேயல்ல !

விளையாட்டு விழாவில் தவிசாளர் ஜெயசிறில் தெரிவிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா)

கடந்த பொது தேர்தலில், எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சுமார் 31000 வாக்குகளை பெற்று கொண்ட நபர் எமது மக்களை ஏமாற்றி விட்டார். அவர் தேசியத் தலைவரையே ஏமாற்றியவர். அந்தமாபெரும் தலைவரையே ஏமாற்றிய அவருக்கு, மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற கிரிக்கட் விளையாட்டுவிழாவில் உரையாற்றிய  காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டுடன்  இணைந்ததாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி சிநேகபூர்வ கடின பந்து கிறிக்கட் விளையாட்டு போட்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலாநந்தா  மைதானத்தில் நடாத்தியது.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழக அணிக்கும்,  அம்பாறை சத்தாதிஸ்ஸ விளையாட்டு கழக அணிக்கும் இடையில் இப்போட்டி இடம்பெற்றது.
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக்ராஜபக்ச கலந்துசிறப்பித்தார்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:

இந்நாட்டில் சிங்கள பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தமிழர்கள் எப்போதும் தயாராகவே உள்ளார்கள். அதற்கான நல்லெண்ண சமிக்ஞையையே காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினர் வழங்கி உள்ளனர். தமிழ் மக்களின் உரிமைகள்,  சுதந்திரங்கள் ஏற்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் செய்து தரப்பட வேண்டும்.

ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறாக இல்லை. எமது இந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்று காலம் காலமாக சிங்கள அமைச்சர்கள் மற்றும் அரசாங்க எம்.பிக்கள் ஆகியோரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்த மைதானத்திற்கும் ,ஏன் எமது ஊருக்குள்ளும் எத்தனையோ அரசஅமைச்சர்கள், அரசஎம்பிக்கள் கடந்தகாலங்களில் வந்தார்கள். அமைப்பாளர்களும் வருவார்கள்.இணைப்பாளர்களும் இருப்பார்கள். வாயினிக்க வாக்குறுதிகள் தந்தார்கள். சென்றார்கள். அவ்வளவுதான்.எவையும் நடக்கவே இல்லை. இந்த மைதானம் கடந்தகாலங்களில் இருள்சூழ்ந்து இருந்தன. நான் தவிசாளரானபின்பே பல எல்ஈடி பல்புகளை சுற்றவர போட்டேன்.இப்போது 15லட்சருபா மைதானத்திற்காக ஒதுக்கியுள்ளோம்.

கல்முனையில் இன்று 40ஆயிரம் தமிழ்மக்கள் நிர்க்கதியாக நடுத்தெருவில் நிற்கிறார்கள் அவர்களது உண்மையான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் விரக்தியிலுள்ளார்கள்.

கடந்த தேர்தலில் 1லட்சத்து 20ஆயிரம் தமிழ்வாக்குகளை 3அணிகளாக பிரிந்துநின்று சிதறடித்தார்கள். தமிழர் ஒருவரை அரசசார்பில் தெரிவுசெய்து நம்மை அபிவிருத்தி செய்யலாமென்று நினைத்து ஒருவருக்கு ஒரு சாரார் ஆதரவுநல்கினார்கள். இன்னும் சிலர் நேரடியாக பெரும்பான்மையினருக்கு ஆதரவு நல்கும் என்று வாக்குகளைப்பிரித்தார்கள். மற்றத்தொகுதியினர் தமிழ்த்தேசியத்திற்காக தனித்துநின்றார்கள். விளைவு தமிழ் உறுப்பினரை இழந்தார்கள்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்கிற நம்பிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஸவுக்கு கல்முனை தமிழ் மக்களில் 7500பேர் வாக்களித்தனர். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
அவர் போன்று பலரையும் நம்பினர். ஆனால் இன்று தரமிறக்கம் நடக்கிறது. இந்நிலையில் பெரும்பான்மையினத்தவருடன் தொடர்ச்சியாக நம்பிக்கைவைத்துப் பயணிக்கலாமா? என்ற வினா எழுகிறது. எனினும் இன்று ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசஅமைப்பாளர்கள்  வந்துள்ளீர்கள். எமது உணர்வுகளை மதியுங்கள்.எம்மையும் சேர்த்து வாழுங்கள்.உங்கள் வழியில் வருகின்றோம்.எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யுங்கள்.

இன்னும் இந்நாட்டில் சிங்கள பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தமிழர்கள் எப்போதும் தயாராகவே உள்ளார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
என்றார்.
 கழகச் செயலாளர் விளையாட்டுத்துறை  ஆசிரியர் ஜெ.சோபிதாஸ் நன்றியுரைநிகழ்த்தினார்.