மட்டு.காத்தான்குடியில் தனியார் நிதி நிறுவனக்கட்டிடத்தில் பாரிய தீ பரவல் கட்டிடம் எரிந்து நாசம்

(ஜவ்பர்கான், ரக்ஸனா)

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தனியார் நிதி நிறுவனக்கட்டிமொன்றில்  இன்று  இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலினால் நிதி நிறுவனத்தின் கட்டிடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சில மணிநேரத்தின் பின்னா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தனியார் நிதி நிறுவனக்( LBFinance) கட்டிடத்தில் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து இராணுவத்தினர் பொலிசார் பொது மக்கள் இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் வாகனம் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரினால் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் வாகனத்தின் மூலம் முற்றாக தீ அணைக்கப்பட்டது.

குறித்த நிதி நிறுவனக் கட்டிடத்திலிருந்து ஏனைய கட்டிடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து பொருட்களும் பொது மக்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.

இதன் போது காத்தான்குடி பிரதான வீதி உட்பட காத்தான்குடியின் பல பகுதிகளுக்கு மின் சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது.

குறித்த இடத்துக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயண சிறீ தலைமையிலான பொலிசார் வருகை தந்துடன் இராணுவத்தினரும் வருகை தந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இத் தீ பரவலுக்கான காரணம் குறித்து காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக பொலிசார் குறிப்பிட்டனர்.