அக்கரைப்பற்று 8 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பணம் உட்பட நகைகளும் திருட்டு

வி.சுகிர்தகுமார் 

  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லப்பிள்ளையார் வீதி அக்கரைப்பற்று 8 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பணம் உட்பட நகைகளும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளதுடன்  நேற்றும் இன்றும் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டின் உரிமையாளர் தொழில் நிமித்தம் வெளிநாடொன்றில் உள்ள நிலையில் அவரது மனைவி பிரதேச செயலகமொன்றில் கடமைபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் வழமைபோன்று அவர் பிரதேச செயலகத்திற்கு சென்றதன் பின்னர் அவரது அக்காவின் மகன் கல்வி கற்பதற்காக குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதன்போதே குறித்த வீட்டின் உட்கதவுகள் உடைக்கப்பட்டு அங்கு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதை அவதானித்து வீட்டின் உரிமையாளருக்கும் உறவினர்களுக்கும் தகவலை வழங்கி உள்ளார்.

இதன் பின்னராக அங்கு விரைந்த வீட்டின் உரிமையாளரான பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த அம்பாரை விசேட தடயவியல் பொலிசார் மற்றும் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை நேற்று பல்வேறு கோணங்களில் ஆரம்பித்துள்ளதுடன் இன்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணகைள தொடர்ந்து வருகின்றனர்.

இதேநேரம் குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவிலாளர்களுக்கும் உள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அன்மையில் ஆலய கும்பாபிசேகம் ஒன்றின் போது பெண்ணொருவரின் தாலியும் பறிக்கப்பட்டுள்ளதுடன் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.