வாகரையில் விவசாயத்திற்கென வாங்கும் காணிகள் கைமாறி விற்பனை செய்யப்படுகின்றன! – எஸ்.வியாழேந்திரன்!

வாகரைப் பிரதேசத்திலுள்ள காணிகளை பண்ணை மற்றும் விவசாயம் செய்யப் போகின்றோம் என்று பெற்று அவற்றை கைமாறி விற்பனை செய்யும் வரலாறு வாகரையில் இடம்பெற்று வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கக்கரி செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை மாங்கேணியில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறுமையின் வாழும் மக்களை கொண்ட பிரதேசமாக வாகரைப் பிரதேசம் காணப்படுகின்றது. ஆனால் தற்போது அபிவிருத்தி காணப்பட்டு வருகின்றது. வாகரைப் பிரதேச நில வளத்தினை முழுமையாக பயன்படுத்த முடியா பயங்கரமான சூழ்நிலையில் தான் வாகரை மக்கள் காணப்படுகின்றனர்.
தங்களது உடல் உறுப்புக்களை இழந்து வாகரைப் பிரதேச மக்கள் நிலங்களை பாதுகாத்தனர். ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தினை சாராத, பணம் படைத்த பலருக்கு இங்கு நூற்றுக் கணக்கான காணிகள் உள்ளது. நாங்கள் பண்ணை மற்றும் விவசாயம் செய்யப் போகின்றோம் என்று பெற்று அவற்றை கைமாறி விற்பனை செய்யும் வரலாறு வாகரையில் இடம்பெறுகின்றது.
வாகரைப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாத வாகரை மக்களுக்கு காணிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும். வாகரை மக்களுக்கு காணி, வளம் என்பவற்றை வழங்கும் பட்சத்தில் அவர்களும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.
நிலத்தை பாதுகாக்க வேண்டும், வளத்தை பாதுகாக்க வேண்டும், எல்லைக் கிராமத்தினை பாதுகாக்க என்று இன்று பலர் பேசுகின்றனர். சும்மா பேசுவது நல்லமல்ல. எல்லைக் கிராமத்திலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சீர்செய்து வழங்கும் பட்சத்தில் மக்கள் இடம்பெயர்வு இடம்பெறாது என்றார்.
இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்தரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ,குகான் விஜயகோன், கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.எம்.என்.தயாரட்ன, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கணேசன் உட்பட திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.