போட்டியுலக யுகத்தில் முன்னேற வேண்டுமானால் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மட்டு. மாவட்ட செயலாளர் க. கருணாகரன். 

( சஞ்சயன் , ரக்ஸனா   )

போட்டியுலக யுகத்திலே முன்னேறவேண்டுமானால் எமது திறன்களை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் க. கருணாகரன் தெரிவித்தார்.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் தலைமையில் நேற்று( 30) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி 2012 இல் அனைவருக்குமான கணினி அறிவு என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டாலும் காலத்தின் தேவை கருதி தொழில்வாய்ப்பினை பெறத்தக்க தொழில்நுட்ப பயிற்சிகளை ஆரம்பித்து, மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவில் தர முகாமைத்துவ முறைமை ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரியாக தேசிய தொழிற் தகைமை பயிற்சிகளை நடைமுறைப்படுத்தி வருவது சிறப்புக்குரியது

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்கலைக்கழகம், அழகியற் கற்கைகள் நிறுவகம், தேசிய கல்வியியல் கல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரி போன்ற அரசின் உயர்கற்கை நிறுவனங்கள் இருந்தபோதிலும், விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியும் காலத்தின் தேவைக்கேற்ப பல மாணவர்களிற்கு பயிற்சியளித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருவதையிட்டு பெருமையடைகிறேன்.

ஒரு அமைப்பு தொடர்ச்சியான வளர்ச்சியினை பெறுவதாயின் அதன் கொள்கைகளை சரியான முறையில் பற்றிக்கொள்வது தான் சிறந்த வழியாக இருக்க முடியும். அதன் அடிப்படையிலே பெரும்பாலான தொழில்நுட்பக்கல்லூரிகள் செயற்படுகின்றன என்பதை நன்கறிந்துள்ளேன். பயிற்சியுடன் சேர்த்து பயிலுனர்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வதோடு, ஆன்மீக சிந்தனைகளையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான அவசியத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும். தற்போது இலங்கை மன்றத்தின் ஊடாக LINCOLN பல்கலைக்கழகத்தின் உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளக்கூடிய அங்கீகாரத்தினைப் பெற்றிருப்பது முக்கிய மைக்கல்லாக தெரிகிறது என்றார்.