கல்லறைகளில் ஏறி மிதித்து நாங்கள் பிழைப்புவாத அரசியலை நடாத்த முடியாது – இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்.

(படுவான் பாலகன்) தமிழ்மக்களின் பிரச்சினைகளையும், அம்மக்களின் கண்ணீரையும், வைத்துக்கொண்டு அவர்களின் கல்லறைகளில் ஏறி மிதித்து நாங்கள் பிழைப்புவாத அரசியலை நடாத்த முடியாதென இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதியின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “விரைவான கட்டுமான செலவு – செயற்திறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கு அமைய முனைக்காடு கிராமத்தில் வீடொன்று அமைப்பதற்கான அடிக்கல் இன்று(22) திங்கட்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.  அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  இதனைக்குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2015ம் ஆண்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே பொருத்து வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு 65ஆயிரம் வீடுகள் வழங்கப்படவிருந்தன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருவீட்டைக்கூட கட்டவில்லை. 65ஆயிரம் வீடுகளும் கட்டப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணத்தில் 80வீதமான மக்களின் வீட்டுப்பிரச்சினை நீக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் மூலமாக, முதற்கட்டமாக 100வீடுகளை மட்டக்களப்புக்கு கொண்டுவந்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக 52ஆயிரம் வீட்டுத்தேவைகளும், 59ஆயிரம் மலசலகூடமும் தேவையாக உள்ளன. இம்மாவட்டத்திலே உள்ள இவ்வாறான பிரச்சினைகளையும், குடிநீர், மின்சார வசதி போன்ற பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முன்னெடுப்புக்களை இவ்வாட்சிக்காலத்திலே மேற்கொள்வோம்.
கிழக்கு மாகாணத்தில் 58.9வீத சமூகமாக காணப்பட்ட தமிழர்கள். இன்று 38.6வீதமாக மாறியிருக்கின்றனர். நில, கல்வி, பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளோம். இவ்வாறான துறைகளை கட்டியெழுப்ப வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. அபிவிருத்தி சார்ந்த அரசியலைதான் தற்காலத்தில் முன்னெடுக்க வேண்டி உள்ளது. ஆனாலும், சில திணைக்களங்கள் இம்மாவட்டத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்துகின்ற வேலைகளை செய்துவருகின்றன. அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி வருகின்றோம். எம்மக்களின் இருப்பு பாதுகாப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்;.
munaikka