“தேசத்திற்கு வெளிச்சம்” திட்டத்தின் ஊடாக வவுணதீவில் மின்சாரம் வழங்கி வைப்பு.

நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு  “தேசத்திற்கு வெளிச்சம்” எனும் தொனிப்பெருளில் மின்சார வசதியற்ற சமுர்த்திப்பயனாளிகளுக்கு இலவச மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று மட்டக்களப்பு வவுனதீவு – மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட  தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான மின்சார வசதி இல்லாத சமுர்த்திப் பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (20) சனிக்கிழமை இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மின்சார சபை அத்தியட்சகர் ஏ.எல்.மாஹித், பிரதேச செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,  முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி, மின்சாரசபை உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்களென பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவின் தேசிய அமைப்பாளர் பொருளாதார புத்தெழுச்சி வறுமை ஒழிப்பிற்கான தலைவருமாக இருக்கின்ற பஷில்ராஜபக்ச அவர்களின் என்னக்கருவில் நடைமுறை அமுலாக்கலில் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அனைவருக்கும் மின்சாரம்,  சுத்தமான குடிநீர் என்பன வழங்கப்படவுள்ளது.
அதே வேளை குறித்த நிகழ்விற்கு இணையாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான மின்சார வசதி  இலவசமாக பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.