அம்பாரை மாவட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் அரணாகவிருந்த அமரர் வேல்முருகு மாஸ்டர்

இன்றைய தினம் 20.03.2021 அன்னாரது 33 ஆவது நினைவு தினமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையிலே பற்றுடன் வளர்ந்து தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இறக்கும் வரை சுறுசுறுப்போடு இயங்கிய அமரர் வேல்முருகு மாஸ்டர் தமிழ் மக்களால் என்றுமே நினைவுகூரப்படுபவராய் உள்ளார். இன்றைய தினம் 20.03.2021 அன்னாரது 33 ஆவது நினைவு தினமாகும்.

கிழக்கின் கல்முனைப் பிரதேசத்தில் பஞ்சபாண்டவர்களின் கதையினால் புகழ்பெற்ற பாண்டிருப்பு – 02 கிராமத்தில் வசித்து வந்த ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் 3 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக 15.04.1939 ஆம் ஆண்டு பிறந்தார். மிடுக்கான தோற்றமும் எடுப்பான நடையும் கொண்ட வேல்முருகு மாஸ்டர் தனது அரசியல் வாழ்க்கைத் துணைக்காக அதே ஊரில் அவதரித்த தந்தை செல்வாவின் நாமத்தைச் சுமந்திருந்த பெண்மணி செல்வராணியை 1967 ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.

உண்மை நேர்மை ஒழுக்கம் என்னும் பண்புகளுடன் சிரித்த முகத்துடன் கூடிய சிறிய தாடியோடு வெள்ளை வேட்டி சேட்டுடன் ஆசிரிய சேவையுடன் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ஆரம்பமாகிய தமிழ் பணி மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்க இரவு பகல் பாராது எப்போதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் அதிக அக்கரை கொண்டு அவற்றை வளர்ப்பதற்கு அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் மனங்களிலே என்றுமே மாறாத சுவடாகவுள்ளது.

தமிழரசுக் கட்சி காந்திய வழியில் தமிழர் உரிமைகளுக்காக போராட வேண்டும் எனும் தூய கொள்கையோடு எழுந்த அமைப்பாகும் அதன் மீது கொண்ட பற்றும் தமிழின் மீதும் தந்தை செல்வா மீதும் கொண்டிருந்த நட்பினால் தமிழ் பேசும் இக்குடும்பம் தமிழ் அடிச்சுவட்டியினைப் பின்பற்றி தான்பெற்றெடுத்த மூன்று பெண் பிள்ளைகள் முறையே தமிழ்ச்செல்வி, தமிழ்வாணி மற்றும் தமிழினி என பெயர் வைத்து செம்மொழியான தமிழினை அழகு பார்த்து இல்லறத்தில் இனிமை கண்டவர். இச்செயலானது அவரது பேச்சிலும் நடையிலும் செயலிலும் வாழ்விலும் தமிழ்த் தேசியம் கலந்திருந்ததைக் காண முடிந்தது.
தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவும் தனது நலன்களைக் கவனிக்காமல் தமிழ் பேசும் மக்களுக்காக சேவைகள் செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கான ஈழத் தமிழகமே இவர் வீடாகும். தான் வாழ்ந்த இல்லத்திற்குக் கூட செல்வாஅகம் எனப் பெயர் சூட்டி அழகுபார்த்தவர். வடக்கினிலும் கிழக்கினிலும் உள்ள அக்கால அரசியல் தலைவர்களுடன்  பயணித்தவர். அம்பாரை மாவட்டத்தினிலே தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தனது கணவனின் அரசியல் செயற்பாட்டுக்களுக்காக வடக்கினிலிருந்து வரும் வரும் அரசியல் தலைவர்கள்  எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், கோவை மகேசன் மற்றும் வண்ணையானந்தன் கிழக்கினிலிருந்து வரும் தங்கத்துரை, ஆர்.சம்பந்தன், காசியானந்தன் மற்றும் இராஜதுரை ஆகியோருக்கு இரவு பகல் பாராது அடைக்கலம் வழங்கி வந்தாரை வரவேற்கும் கிழக்கின் பண்பாட்டிற்கமைவாக உபசரித்த பெருமைகள் எல்லாம் வேல்முருகு மாஸ்டரின் மனைவி செல்வராணியை சாரும்.

அம்பாரை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராட்டம் உச்சம் பெற்றதனால் தமிழ்த் தலைவர்களின் இருப்புக்கள் பெரும் சவாலாகக் காணப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியலில் பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில் துணிச்சலோடு பாண்டிருப்பில் உள்ள தனது வீட்டை தமிழர்களின் அறவளிக்கான இல்லமாக மாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சிகளின் அரசியல் பயணத்தை மேற்கொண்டதோடு அடைக்கலக் கூடமாக தனது இல்லத்தை மாற்றியமைத்து தனது பொருளாதாரத்தின் முழுப் பகுதியையும் மக்களின் அரசியல் உரிமைக்காக அர்ப்பணம் செய்தார். இதற்கு அவரது சகோதரர் ஆறுமுகம் இராசலிங்கப் பத்தர் அக்காலத்தில் கல்முனையில் நகைகள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபாடு கொண்டு பொருளாதாரத்தில் மேம்பட்டுக் காணப்பட்டதனால் அவரது அரசியல் செயற்பாட்டுக்காக ஒரு மோட்டார் வண்டியை வாங்கி அன்பளிப்புச் செய்திருந்தமையானது வேல்முருகு மாஸ்டர் மாத்திரமல்லாது தனது சகோதரரையும் அரசியல் செயற்பாட்டிக்கு உள்வாங்கியிருந்தார்.

அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் கவுண்சில் அங்கத்தவராகவிருந்து மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகையில் 09.08.1981 ஆம் ஆண்டு சென்றல் கேம் 4 ஆம் கொலணி பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் பிரச்சினை தோற்றம் பெற்று வீடுகளை தீவைத்து தாக்கியதனால் அவர்களை சமரசம் செய்வதற்காக 4 ஆம் கொலணி நோக்கி தனது காரில் 3 பேருடனும் கூடவே அருட்தந்தை எல்மோ ஜோண்பிள்ளை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஒருவரையும் ஏற்றிக் கொண்டு அவரது பங்கு மக்களின் பிரச்சினைகளை விசாரிக்கச் சென்றபோது எதிரே வந்த ஆயுததாரிகள் வேல்முருகுவை கல்முனை நோக்கிச் செல்லுமாறு பணித்ததினால் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்பு பயணம் வெற்றியளிக்காததினால் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வதை செய்யப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்படடிருந்த வேளையில் அவர் தனது ஹில்மன் காரின் இருக்கை விட்டு உள்ளே சுருண்டு இருந்ததினால் தாக்குதலிலிருந்து காப்பற்றப்பட்டார். அப்போதைய காரின் கதவுகள் கனதியான இரும்புத் தகட்டினால் ஆனதால் தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்.
அதன்பின்பும் கூட அவர் தமிழர் உரிமைச்  செயற்பாட்டில் தூண்டப்பட்டு அஞ்சா நெஞ்சத்தோடு மீண்டும் அம்பாரை மாவட்டத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அரசியலில் அக்காலத்தில் பல இளைஞர்களை உருவாக்கியதோடு தூய்மையான அரசியல் பணியை மேற்கொண்டு மக்கள் மனங்களில் இருந்து மாறாத பெயரைப் பெற்றிருந்தார்.
அம்பாரை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு உறவுப் பாலமாக துலங்கினார். உணவுப் பொருளான பிட்டைப் பிரிப்பதற்காக இடையினிலே தேங்காய்ப் பூவைப் போடுவது மரபாகும். பிட்டையும் தேங்காயப் பூவையும் போலத்தான் அம்பாரை பிரதேச மக்களின் தமிழ் முஸ்லிம் வாழ்வியல் உரிமை அமைந்திருந்தது. பாண்டிருப்பைச் சுற்றி அயல்கிராமங்களான மருதமுனை, நற்பட்டிமுனை, கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது போன்ற முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. அக்காலங்களில் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இன முரன்பாடுகள் வரும்போது தமிழர்கள் முஸ்லிங்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள் என எல்லா இளைஞர்களிடத்திலும் நட்புடன் பேசி பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்தி  பகைமையை வளர்க்காது உறவைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டினார். எல்லாக் கூட்டங்களிலும் அரசியல் உரிமைகளைப் பேசிப் பேசியே தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமாய் இருந்தர்ர்.
முஸ்லிம் தலைவர்களான மசூர் மௌலானா, சம்சுதீன், அகமட் வெல்வை, ஏ.எச்எம். அஸ்ரப், எம்.சி.கனகரட்ணம், பன்னீர்ச் செல்வம், ஆகியோருடன் கொண்டிருந்த நட்பினால் எல்லைப்புறங்களில் பிரச்சினைகள் வரும்போது குறித்த அரசியல் தலைமைகளைச் சந்தித்து அஞ்சாத நெஞ்சோடு அவ்விடத்திற்குச் சென்று பிணக்குகளை சமரசம் செய்வதில் அரும் பாடு பட்டதனால் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மிகவும் மதிப்பு மிக்கவராகத் திகழ்ந்தார். இச்செயற்பாடுகளினால் அவரது இறுதிக்கிரியையில் முஸ்லிங்கள் கலந்து கொண்ட் அஞ்சலி செலுத்தியதானது அவரது தமிழ்த் தேசிய இன உறவின் மேம்பாட்டைக் காண்பித்தது. தமிழ் மக்களின் உரிமைக்காக வடக்கு கிழக்கு தெற்கு எங்கும் ஓயாது குரல் கொடுத்தமையானது அரசியலில் அவர் கொண்டிருந்த புலமையையும் பற்றுதலையும் பறைசாற்றிக் காண்பித்தது. அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பெறும்பொது அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களையெல்லாம் துணிச்சலோடு வெளியுலகிற்கு எல்லாம் கொண்டு சென்றார். உரலுக்கு ஒரு பக்கம் இடி தவிலுக்கோ இரு பக்கமும் அடி என்பது போல் அம்பாரை மாவட்டத் தமிழர்களின் இருப்பு பெரும் சவாலை அண்டிய காலத்தில் ஆக்கிரோசம் கொண்டு இளைஞர்களைச் சூடாக்கி அதில் குளிர்காயாமல் அகிம்சையைக் கடைப்பிடித்து தன்மானத் தமிழனுக்குரிய அடிப்படைக் கொள்கையை கடைப்பிடித்து எல்வைப்புறங்களில் வாழ்ந்த மக்களின் பாதுகாப்புக்கு அரணான விளங்கிய பெருமை வேல்முருகு மாஸ்டரையே சாரும்.

1988.04.16 ஆம் திகதி வேல்முருகு மாஸ்டரின் இல்லத்தின் அருகில் உள்ள பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் விடுதலையை வலியுறுத்தி நாகேந்திரன் எனும் போராளி உண்ணா நோன்பிருந்தார். அவரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வேல்முருகு மாஸ்டரும் பூரண ஆதரவினை வழங்கி நாள்முழுவதும் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

தனது 49 ஆவது அகவையில் 20.03.1988 அன்று அவர் கடத்தப்பட்டு கல்முனை எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ தரவைப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதாக வந்த செய்தியானது தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்த்த அத்தனை உள்ளங்களிலும் வேல்பாய்சிய வலியை தோற்றுவித்திருந்தது. அப்பரதேசமெல்லாம் சோகம் ததும்பியது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலத்திற்கு அரசியல் தலைவர்கள் ,கல்வியிலாளர்கள், பொதுமக்கள் எனப் பலராலும் மலரஞ்சலி மற்றும் இரங்கல் உரைகளின் பின்பு இறுதி ஊர்வலம் ஆயிரக் கணக்கானோர் மத்தில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொன்பாவேந்தர் பாண்டியூர் பொன் நவநீதனால் எழுதப்பட்ட ‘ஈயக் குண்டே உனக்கு இரக்கம் இல்லையா’ எனும் கவிதை அவரின் இழப்பைத் தாங்க முடியாது இருந்த எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்திருந்தது.

அவரது நினைவாக பாண்டிருப்பு-02 ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலயத்தின் அருகில் உள்ள அரங்கிற்கு ஊர் மக்களினால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக அவர் ஆற்றிய சேவைகளினால் அவரை நினைவு கூரும் முகமாக வேல்முருகு அரங்கு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2016 ஆம் அண்டு அம்பாரை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனினால் ருபாய் 40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில்; பாண்டிருப்பில் வேல்முருகு சிறுவர் பூங்காவை நிர்மாணித்து திறந்து வைத்தனர். பின்னர் 2018 ஆண்டு தமிழ்த் தேசிய விரோதிகளால் சேதமாக்கப்பட்டது. தற்போது அது மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அவரின் வரலாறு பதியப்பட்டு மீண்டும் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி இ தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இரண்டறக் கலந்த இயல்பான சேவை மனப்பான்மை கொண்டு சேவையாற்றி வந்த  அமரர் வேல்முருகு மாஸ்டரின் இழப்பானது இதுவரை எவரினாலும் நிரப்பப்படாது வெற்றிடமாக உள்ளதானது அம்பாரை மாவட்டத் தமிழ் மக்களிடத்தில் என்றுமே ஈடு செய்ய முடியாததொன்றாகும்.

சிவம் பாக்கியநாதன்
மாநகரசபை உறுப்பினர்
மட்டக்களப்பு