பாக்கு நீரினையை இன்று நீந்திக்கடந்த சியாமளா.

இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

47 வயதான நீச்சல் வீராங்கனை சியாமளா கோலி, இன்று (19) இலங்கையின் தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடியை பாக்கு நீரிணை ஊடாக, சுமார் 14 மணி நேரத்தில் (13 மணி 40 நிமிடம்) நீந்தி கடந்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு மன்னார் வளைகுடாவிலிருந்து நீச்சல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார். வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆரம்பித்துவைத்துள்ளார்

அதற்கமைய, இச்சவால்மிக்க பயணத்தை உலகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் 13ஆவது நீச்சல் வீரராகவும் சியாமளா கோலி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

தென்கொரியாவின் குவாஞ்சுவில் நடைபெற்ற 2020 FINA உலகளாவிய வீரர்களுக்கான சுற்றுப்போட்டியில் தெலுங்கானாவை பிரதிநிதித்துவப்படுத்தி  சியாமளா கோலி பங்குபெற்றியிருந்தார். 2020 நவம்பரில் பட்னாவில் உள்ள 30 கிலோ மீட்டர் அகல கங்கை ஆற்றை  110 நிமிடங்களில் நீந்தி கடந்து ஆறாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

பாக்கு நீரிணை கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966-ல்கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென்என்பவர்பாக்கு நீரிணை  தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971-ல்தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார். 2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக்கு நீரிணை நீந்திக் கடந்தார். அதுபோல, கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹு (45) என்பவர் முதல் பெண்ணாக பாக்கு நீரிணை கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.

சியாமளா கோலி அனிமேஷன் பட தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என்ற பல்வேறு ஆளுமைகளை கொண்டிருக்கும் அதேவேளை நான்கு வருடங்களுக்கு முன்னர், நீச்சலில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத் கசிபௌலி நீச்சல் தடாகத்தில் அவரது பயிற்றுவிப்பாளரான ஆயுஸ் யாதவின் வழிகாட்டலுடன் பாக்கு நீரிணையை கடப்பதற்கான நீச்சல் சவாலுக்குரிய பயிற்சிகளை அவர் பெற்றிருந்தார்.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கும் சாதனையானது சகல பெண்களுக்குமான ஒரு பாரிய சாதனையாக பதியப்படும் எனத் தெரிவித்துள்ள சியாமளா கோலி, பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதனையும், பெண்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கும் இவ்வாறான விடயங்கள் துணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்