மாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம்

(வயிரமுத்து திவாகரன்)

விவேகானந்த சமுதாய நிறுவகமானது மாணவர்களின் மாற்றத்துக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வாகரைப் பிரதேச கட்டுமுறிவு மற்றும் ஆண்டாங்குளம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் இருந்து மட்/ககு/கட்டுமுறிச்சி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் நோக்கிலும், அவர்களின் வறுமைகாரணமான உணவுத் தட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு, தரம் 9 முதல் தரம் 11 வரையான மாணவர்களிற்கு பாடசாலையின் பின்னரான பின்னேர வகுப்புக்களில் ஈடுபட செய்வதற்கு மதியநேர போசாக்கு உணவு வழங்கும் திட்டம் பாடசாலை அதிபரின் தலைமையின் நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் நிர்வாகத்தின் பணிப்பாளர் குறிப்பிடுகையில் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என பல்வேறு விடயங்களில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் உள்ள இந்த இரண்டு கிராமங்களிலும் பல்வேறு திறமைகளுடனும் கற்றல் ஆர்வத்துடனும் மாணவர்கள் உள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் மிகவும் ஆர்வமுள்ள அதிபர், ஆசிரியர்களை உள்ளடக்கிய பாடசாலை சமூகத்தின் செயற்பாடுகளுமே எம்மை இந்த பாடசாலையில் இந்த செயற்றிட்டத்தினை மேற்கொள்ள தூண்டியது என தெரிவித்தார்.

அத்தோடு 181 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் தரம் 9 முதல் 11 வரை 39 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே இவர்களை க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையச் செய்வதற்காக பசியாற்றலும் கல்வியூட்டலும் என்ற தொனிப்பொருளில் மதியநேர போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

இவ்வாறு பின்தங்கிய எல்லைப்புற கிராமங்களில் உள்ள எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுடன் இணைந்து எமது மாணவர்களின் கல்வியறிவினை விருத்திசெய்வதே எமது நோக்கம் என விவேகானந்த சமுதாய நிர்வாகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.