சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்

தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்ற வகையில் நாம், வெறுப்பு அரசியலை விதைத்து சமாதானத்தை சீர்குலைப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

நாட்டின் குடிமகன் என்ற வகையில தராதரம் பாராமல் அனைவரும்; நாட்டின் சட்டத்தை மதித்து, பின்பற்ற வேண்டும். தனி நபர் ஒருவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியாது” என தெரிவித்த அவர், “தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்களை திருத்துவதற்கான எந்தவொரு தேவை ஏற்படுமாயின், அத்தகைய சட்டங்கள் சட்ட வல்லுனர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருத்தப்பட வேண்டும்.” என குறிப்பிட்டார்.

நியாயமற்ற விஷயங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. சமூகங்களுக்கும் மதத்திற்கும் இடையிலான ஆரோக்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் விரைவாக செயல்பட தயாராக உள்ளோம் என அவர் சுட்டிக்காட்டினார்..

மஹரகமவிலுள்ள மஹமேகாராமய விஹாரைக்கு இன்று காலை (மார்ச் 14) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹரகம மஹமேகாராமயவின் தலைமை விஹாராதிபதி வண. அங்கும்புரே சுகுனபலாபிதான தேரரின் 27வது ஞாபகார்த்த தின வைபத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளரினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் நிதி நன்கொடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மஹரகம மஹமேகாராமய விஹாரையின் விஹாராதிபதி வண. அங்கும்புரே அமரவன்ஸ தேரர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.