பொத்துவில் கனகர்கிராம மக்களை மீள்குடியேற்ற ஏற்பாடு!

கலையரசன் எம்.பி. ,தவிசாளர் ஜெயசிறில் மக்களுடன் சந்திப்பு.
( வி.ரி.சகாதேவராஜா.)


கடந்த 923 நாட்களாக சத்தியாக்கிரகப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதற்கு முன்னோடியாக  பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருபன் அனுரத்த  பொதுமக்களுக்கான பகிரங்க அறிவித்தலொன்றை நேற்றுமுன்தினம் விடுத்துள்ளார்.

அசாதாரணசூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்தல் தொடர்பான அறிவித்தல் அது. அவ்வறிவித்தலின்பிரகாரம் இறுதியாக நடைபெற்ற நேர்முகத்தேர்வினடிப்படையில் அவர்களது பெயர்ப்பட்டியல் இத்தால் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏதாவது முறைப்பாடிருந்தால் பொதுமக்கள் எதிர்வரும் 15ஆம் திகதிவரை தமக்கு அறிவிக்கலாமெனக்கேட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க 1990 யுத்தத்தின்போது போது இடம்பெயர்ந்து 30வருடங்களாக மீளக்குடியேற அனுமதி மறுக்கப்பட்டிருந்த மக்கள் கடந்த 923நாட்களாக அதேஇடத்தில் சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய மக்கள் சந்திப்பு:

இந்நிலையில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மற்றும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் நேற்று அங்கு விஜயம் செய்து போராட்டத்திலீடுபடும் மக்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

இருவரும் அந்தமக்களுடன் சுமார் 2மணிநேரம் கலந்துரையாடினர். போராட்டக்குழுத்தலைவி றங்கத்தனா, உறுப்பினர் ராசா ஆகியோர் தாம் கடந்துவந்த கடுமையான பயணம்பற்றிவிபரித்து தற்போதைய நிலைவரம் எடுத்துக்கூறி தமக்கான காணியை உரியமுறையில் பெற்றுத்தரவேண்டுமெனக்கோரிக்கைவிடுத்தனர்.

சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு இருவரும் விளக்கமளித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில்:

அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினராகஇருக்கும் தமிழ் மக்கள் பாரிய சவால்களையும் ,தேவைகளையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள். அவற்றிலொன்றுதான் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டமாகும். இவர்களது போராட்டம் 923 நாட்களை கடந்துள்ளது.
தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீளவும் குடியமர்த்த பட வேண்டும் என நீண்ட காலமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்களுக்கு,  குடியமர்த்த படும் விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள்  கூறிய போது ஆரம்பத்தில் எவ்வாறு குடியமர்த்தப்பட்டோமோ, அந்த அடிப்படையில் எமக்கு காணிகள் வழங்க பட வேண்டும் என்றும்,  இங்கு வாழ்ந்த அனைவரும் குடியமர்த்த பட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இருக்கின்றனர் .இது நியாயபூர்வமானது . இம் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று இறுதி கட்ட வேலைப்பாடுகளுக்கு நாம் வந்துள்ளோம் .  கட்சி பேதமின்றி  அரசியல் பிரமுகர்கள்  தன்னார்வலர்கள்  என பலரும் கனகர் கிராம மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.
என தெரிவித்தார்.

தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:
கடந்த 923நாட்களாக இந்தஇடத்தில் யானை, பாம்பு, நுளம்புகளுக்கு மத்தியில் தாம் வாழ்ந்தமண்ணைக்கேட்டு போராட்டம்நடாத்திவருகின்றனர். இத்னாட்களுள் போராட்டத்திலீடுபட்ட 9பேர் மரணித்துள்ளனர். இன்றும் ஒருவர் மரணித்துள்ளார். அவர்ளது ஆசை நிறைவேறாமல் மரணித்துள்ளனர். தற்போது  இருக்கின்றவர்களாவது சாவதற்கு முன் தாம் வாழ்ந்த மண்ணில் வாழவிரும்புகின்றனர்.அதற்காவது இவர்களை குடியேற்றவேண்டும்.


யுத்த சூழலால் இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வறுமையாக இருக்கின்றார்கள் நாட்கூலியாக இருக்கின்ற மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது . அவர்களது வாழ்க்கை தரம் உயரவேண்டும் எனில் வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். என்றார்.

இதேவேளை இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் பொத்துவில் பிரதேசசெயலகத்தில் இன்று நடைபெறும் பிரதேசஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இறுதிதீர்மானமெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.