புகையிரத ஒழுங்கைக்கு திடீர் விஜயம் செய்த ஆணையாளர்; உடனடியாக வேலைகளை நிறைவுறுத்தி கையளிக்குமாறும் பணிப்பு.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத ஒழுங்கையின் விஸ்தரிப்பு பணியானது இன்று வரை நிறைவுறுத்தப்படாமமையினால் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு, வீதி சீர் இன்மையால் பல விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் தம்மிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்த மாநகர ஆணையாளர், இவ் வீதியின் அபிவிருத்திப் பணிகளை உடனடியாக நிறைவுறுத்தி மாநகர சபையிடம் கையளிக்குமாறும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன்  நேற்றுகாலை (20.02.2021) மாநகர சபையின் பொறியியலாளர் திருமதி.சித்திராதேவி லிங்கேஸ்வரன்,  தொழிநுட்ப உத்தியோகத்தர்களான கே.நித்தியானந்தன், திருமதி ஜெயகௌரி ஜெயராஜா ஆகியோருடன் குறித்த வீதிக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அவ் விஜயத்தின் போது, புகையிரத வீதியின் இரு மருங்கிலும் ஒளியூட்டப்படுவதற்கான எவ்வித வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய மாநகர அணையாளர் அதற்குரிய மின் கம்பங்களை  உடனடியாக நடுவதற்குரிய பணிகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

மேலும் பண்டகசாலை பக்கமிருந்து அரசினர் கலாசாலை பகுதிக்கு நீர் வடிந்தோடுவதற்கான வடிகான் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திய அவர் அதற்கான மதிப்பீடுகளை தயாரித்து தன்னிடம் கையளிக்குமாறும் பொறியியலாளரை கேட்டுக்கொண்டார்.