20 இற்கு ஆதரவாக கை உயர்த்திய முஸ்லிம் கட்சிகளினது எம். பிகள் முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டியது அவசியம்

முன்னாள் அமைச்சர் ஹசன் அலி வலியுறுத்து
                                   த. தர்மேந்திரா 

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கை உயர்த்தி வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களிடம் கட்டாயம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
முஸ்லிம் மக்களின் மத உணர்வை இலவச முதலீடாக மாற்றி தொடர்ந்தேச்சையாக ஆதாயம் தேடுவதிலே அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது என்பது அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம். பிகளின் பகிரங்க வாக்குமூலங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது.  அவ்வாறே அரசாங்கம் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களுக்கு மேல் நின்று அதன் இராஜாங்கத்தை கட்டி எழுப்புவதில் வெற்றியும் கண்டு வருகின்றது என்பதும் வெளிப்படையாகி நிற்கின்றது. இவை முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற தொடர்ச்சியான பாரிய சித்திரவதைகளின் வடிவங்களே ஆகும்.
முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டுவதை முடிவுறுத்துவார்கள் என்று அரசாங்க தரப்பினர் பொய்யான வாக்குறுதியை வழங்கி வாக்குகளை பெற்று கொண்ட பிற்பாடு ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிவித்து உள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம். பிகள்
அரசாங்கத்துக்கு ஆதரவாக கை உயர்த்தியமைக்காக   கட்சியிடமும், கட்சி தலைமையிடமும் வெளிப்படையாக மன்னிப்பு கோரி உள்ளனர்.
ஆயினும் இவர்கள் கட்டாயம் முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருதல் வேண்டும். ஏனென்றால் இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருப்பவர்கள் முஸ்லிம் மக்களே ஆவர். அதுவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை தேர்தல் மேடைகள் தோறும் கடுமையாக மேற்கொண்டே முஸ்லிம் மக்களின் வாக்குகளை இவர்கள் பெற்று உள்ளனர்.
இதே நேரத்தில் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம். பிகளும் அதற்கான காரணத்தை கட்டாயம் பகிரங்கப்படுத்த வேண்டும். குறிப்பாக அவர்களும் இதே விதத்தில் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட வகையில் ஏமாற்றப்பட்டு விட்டனரா? என்பதை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும்.
முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டுகின்ற இலங்கை அரசாங்கத்தின் அராஜகத்தை கண்டித்து உலக நாடுகள், சர்வதேச சமூகங்கள் மற்றும் மனித  உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு மிகவும் பலமான முறைப்பாடுகளை மேற்கொள்ள தயாராகி உள்ளன. இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும். அரசாங்கம் திட்டமிட்டு ஏமாற்றி விட்டதாக சொல்கின்ற முஸ்லிம் எம். பிகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அவர்களின் முறைப்பாடுகளை கைப்பட எழுதி கையளிக்க வேண்டும். இதுவே இவர்கள் எமது முஸ்லிம் சமூகத்துக்கு செய்கின்ற பிராயச்சித்தமாக இருக்க முடியும்.