சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள்-

மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மயில் காட்டம்
 
( ஏ.எல்.எம்.ஷினாஸ்)

முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படும், தனியார் சட்டம் நீக்கப்படுமென்ற பேச்சுகள் ஆட்சியாளர்களின் கொள்கைகளில் இறுக்கமாக இருந்த வேளையிலும் 20வது திருத்தத்திற்கு ஆதரவு அளித்து முஸ்லிம் சமூகத்தை அதன் அரசியல் தலைமைகள் காட்டிக் கொடுத்துள்ளார்கள் என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளரும் சிறுத்தை சட்டத்தரணியுமான ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது சட்டத்தரணி இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையின் ஆசிர்வாதத்துடன் வாக்களித்ததாகவும் தலைமை ஏற்கனவே ஆட்சியாளர்களுடன் பேசியபடியே எல்லாம் நடந்தேறின எனவும் கூறுகின்ற விடயம் உண்மையா? என்பதை வாக்களித்த சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக  வாக்களித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்  என  அந்த கட்சியின் தலைமை  சமூகத்திற்கு  கூறிய விடயங்கள்  இன்று  புஸ்வானமாகியுள்ளது.

கட்சியின் உயர்பீடத்தில் 20வது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தலைமை வெளிப்படையாக கூறியதா? கூறவில்லை என்றால் நாட்டில் பாராளுமன்றத்தில் மிக முக்கியமான திருத்தத்திற்கு வாக்களிக்கும் போது ஒரு சிறுபான்மை கட்சியின் தீர்மானம் என்ன? என்பதை
சமூகத்துக்கு குறிப்பாக வாக்களித்த மக்களுக்கு தெரியப்படுத்தாமல் விடுவதன் மர்மம்தான் என்னவோ? ஏமாற்று அரசியலையும் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவர்களை  மன்னிக்கும் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி – ரவூப் ஹக்கீம்,  பசீல் ராஜபக்ஷ – ரவூப் ஹக்கீம் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தை உண்மையா என்பதை கட்சியின் தலைமை முஸ்லிம் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் வேறு ஏதும் டீல்கள் நடந்திருந்தால்,  25 லட்சம் முஸ்லிம்களுக்கு எதிரான துரோகத்தை  இலகுவாக  மன்னிக்க முடியாது.  தலைமையும் சேர்ந்தே துரோகம் இழைத்துள்ளதா? என்ற சந்தேகம்  இன்று முஸ்லிம் மக்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் இவர்களுக்கு பதில் சொல்ல சமூகம் விழித்தெழ வேண்டும். கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக மாறு செய்தவர்களை இடை நிறுத்தாதது ஏன்? இது கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் குறைத்துள்ளது.

இவர்களுக்கு வாக்களித்ததை பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்திருந்தால் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் இன்று முஸ்லிம் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கிளம்புகின்றன.

 எதிர்காலத்தில் இலங்கை வாழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் பயணம் எவ்வாறு அமையப்போகிறது என்று சந்தேகத்தோடு மக்கள் தமது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.