ஒரு வங்கி ஒரு கிராமம்” செயற்றிட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு

தச்சடம்பன் கிராமத்தில் 11 பேருக்கான கடனுதவிகளை வழங்கி வைத்தார் ஆளுனர்

சண்முகம் தவசீலன்

ஒரு வங்கி ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தத்தெடுக்கும் செயற்றிட்டத்தின்  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தச்சடம்பன் கிராமத்திற்குரிய செயற்றிட்டத்தை வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களால்  இன்று (16) மு.ப 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் த.அகிலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாங்குளம் சமுதாய சமுர்த்தி அடிப்படை வங்கி குறித்த கிராமத்தை தத்தெடுத்து 11 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடன் திட்டமாக ஒரு இலட்சம் வழங்கி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் இயங்கிவரும் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து சகல துறைகளையும் ஒன்றிணைத்து பல் துறை சார் உற்பத்திகளை இனங்கண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தி பசுமையான கிராமமாக மாற்றும் நோக்கில் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் , மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தாகள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயளாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்