பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைப் பிரமத வைத்தியர் திருமதி எரங்க ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை குறித்து பிரதம வைத்தியரினால் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அவை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட நோயாளிகளைப் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தொழில்நுட்ப இயந்திர வசதிகள், பிணவறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றன தொடர்பிலும் விசேடமாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதம வைத்தியரினால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்கள் மட்டத்தில் தீர்க்கப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வு காண்பதற்கும், ஏனைய விடயங்கள் தொடர்பில் மத்திய அரசின் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு இயன்ற செயற்பாடுகளை மேற்காள்வதற்கும் ஆவன செய்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பின்னர் வாழைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களைச் சந்தித்து பிரதேசத்தின் சுகாதார நிலைமைகள் மற்றும் டெங்கு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.