தனது வருமானத்தில் ஒரு தொகையை குரங்குகளுக்கு செலவு செய்யும் மட்டக்களப்பு பெண்மணி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

குரங்குகளுக்கு உணவு வழங்கி தனது மாதாந்த சம்மளத்தில் ஒரு தொகை பணத்தை பெண்மணி ஒருவர் செலவு செய்து வருகிறார்.

மட்டக்களப்பு – கோரகல்லிமடு பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணொருவரே இவ்வாறு குரங்குகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிவரும் தங்கமலர் வேலைமுடிந்து வீட்டுக்கு செல்லும்போது கும்புறுமூலை சந்தி பகுதியிலுள்ள குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகிறார்.

சுமார் ஒன்பது மாதங்களாக கும்புறுமூலை சந்தியில் காணப்படும் குரங்குகளுக்கு பிஸ்கட் வழங்குவதாகவும், தான் மோட்டார் வண்டியை அவ்விடத்தில் நிறுத்தும் போது குரங்குகள் தன்னை சூழ்ந்து கொள்வதாகவும் குறித்த பெண்மணி கூறினார்.

குரங்குகளுக்கு தினந்தோறும் இவ்வாறு உணவளிப்பது மனதுக்கு ஆறுதலை தருகிறது என்று கூறிய பெண்மணி, அதற்காக 100 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் வரை செலவு செய்வதாகவும் கூறினார்.