தேசிய இனப்பிரச்சினையினைத் தீர்த்தால், எந்தக் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய இடமில்லை.

மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன். 

சஞ்சயன்

தேசிய இனப்பிரச்சினையினை தீர்த்துவிட்டால் எந்தக் கட்சிகளுக்கும் அரசியல் செய்வதற்கு இடமில்லாமல் போய்விடும். அரசியல் செய்வதற்கு ஒரு அடிப்படை இனவாத, இனத்துவேசம் இருக்க வேண்டும் என்பதையே நாட்டின் ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்று தொட்டு இன்று வரை அரசியல் நகர்வுகளில் முற்போக்கான சிந்தனைகள், தேசியப் பிரச்சினையினை தீர்க்கக்கூடிய தூரநோக்கு என்பன அரசியல் தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. விட்ட பிழைகளையே, தொட்ட அரசியலையே தொடர்ந்தும் செய்கிறார்கள்.

இந்த நாடு ஒரு வகையில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் சாபக்கேடு பெற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் அகிம்சை ரீதியாக போராடி தங்களுடைய பிரதேசத்தில் ஒரு சுயாட்சியைப் பெறவேண்டும். அந்த சுயாட்சியைப்பெற்று தங்களுடைய பிரதேசத்தை ஆட்சிசெய்து தங்களுடைய பிரதேச அபிவிருத்திகளை செய்துகொண்டு தங்களுடைய மக்களின் அபிலாசைகளை தீர்க்க வேண்டுமென்று தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்து பாடுபட்டார்கள். ஆனால் அந்த உழைப்புகளெல்லாம் புறந்தள்ளப்பட்டு இன மோதல்கள், இனக்கலவரங்கள் என்ற அடிப்படையில் 1956 ஆம் ஆண்டு காலத்திலிருந்து 1983 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் சிறுபான்மைத் தமிழ்மக்களின் பொருளாதாரத்தையும் இருப்பையும் புவியியல் ரீதியான ஆளுகைகளையும் இல்லத்தாக்கக்கூடிய விதத்தில் தென்பகுதியில் இருந்த மக்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். மக்கள் நாட்டில் நம்பிக்கையிழந்து கிட்டத்தட்ட பதின்மூன்று இலெட்சம் மக்கள் மேற்குலக நாட்டில் கெளரவப் பிரஜைகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இருந்தாலும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற உறவுகளின் இழப்புகளினால் அவர்கள் நொந்துகொண்டிருக்கின்றார்கள்.

நான்கைந்து வருட அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளுகின்ற ஒரு குறுங்காலத் திட்டத்துடன்தான் வந்திருக்கின்றார்களேயொழிய நீண்ட கால செயல்திட்டங்கள் ஆட்சியாளர்களிடம் இல்லை. நீண்டகால செயற்திட்டம் இருந்திருந்தால் சுதந்திரதமடைந்ததன் பின்னர் இந்த நாடு ஒரு சொர்க்க பூமியாக மாறியிருக்கும். ஆனால் இலங்கையை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றியோ பொதுமக்களைப் பற்றியோ சிந்தனையில்லை.

ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியை கையகப்படுத்துவதற்கு எந்த இனவாத, மதவாத, பேரினவாதத்தை பயன்படுத்தலாம், எவ்வாறு இனங்களை பிரித்து ஆளலாம், எவ்வாறு இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தலாம், எவ்வாறு ஒரு இனத்தின் சொத்துகளை அபகரிக்கலாம், அழிக்கலாம் எரிக்கலாம் கபழீகரம் செய்யலாம் என்கின்ற நாசகார சிந்தனைகளோடு செயற்படுகின்றார்களெயொழிய புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையினை தீர்த்துக்கொள்ளக்கூடிய ஆளுமை, பலம், சக்தி என்பன தலைவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

தேச பிதா என வர்ணிக்கப்படும் டீ.எஸ். சேனநாயக்க முதலாவது பிரதமராக இருந்தார். அவருக்குப் பின்னர் டட்லி சேனநாயக்கா, சேர்
ஜோன் கொத்தலாவ, எஸ்.டப்ள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, கலாநிதி விஜயானந்த தஹநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, ஜெ.ஆர்.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, டிங்கிரி பண்டார விஜேயதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்ரி பால சிறிசேன, கோட்டபாய ராஜபக்‌ஷ என்று தலைமைத்துவ வரிசைகள் நீண்டுகொண்டு போகின்றன. ஆனால் இந்த தலைவர்கள் எவரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய செயற்பாட்டில் ஈடுபடவில்லை. இனங்களுக்கிடையே ஐக்கியத்தை, நாட்டை ஒரு அமைதிப் பூங்காகவாக மாற்றக்கூடிய விதத்தில் செயற்படவில்லை.

எனவே, புத்திஜீவிகளை வெளியேற்றுகின்ற, நாட்டின் பிரஜைகளை துரத்துகின்ற நாடு, வெளியேறிய மக்களின் சாபங்களுக்கு உள்ளாக நேரிடும். எனவே இந்த நாட்டில் சகல மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய சமநிலை ஆளுமை கொண்ட தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்றார்.