அனுருத்தன்
ஒரு மாத காலமாக நீடித்து வந்த வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தின் இலங்கை மீன் பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாரட்சி திட்டத்தினை நிறுத்துவது தொடர்பாக பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சரியான தீர்வினை பெற்றுக் கொடுத்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (29) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கோ.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த திட்டத்தினை பொருத்தமானதொரு இடம் தெரிவு செய்யும் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி சடடவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேற்குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் துறை சார்ந்த பல்வேறுபட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றி பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்
கரையோரம் பேணல் திணைக்களம்,சுற்றாடல் அபிவிருத்தி திணைக்களம்,கடலோர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை,புவிசரிதவியல் கணிய வள அகழ்வு திணைக்களம்,கடல் தொழில் நீரியல் வளங்கல் திணைக்களம்,வாழைச்சேனை மீன் பிடி துறைமுகம், பிரதேச மீன்பிடி சங்க அமைப்புக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன இவ் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
இதன்போது மேற்படி அரச நிறுவணங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட சாதகமான பாதகமான ஆலோசனைகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடன் கலந்துரையாடிய இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்குறித்த தீர்மானத்தினை மேற்கொண்டார்.
கிராம மட்ட மக்களின் எதிர்ப்பு, குடி நீர் உவர் நீராகுதல்,புவி சரிதவியல் திணைக்களம் தவீர்ந்த ஏனைய அரச நிறுவணங்களின் அனுமதி பெறப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்து இடை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.
நாசிவன் தீவு கிராமம் தவீர்ந்து வாழைச்சேனை மீன் பிடி துறைமுக வளாகத்தில் அல்லது பொருத்தமான பிரிதொரு இடத்தில் சமூக மட்ட அமைப்புக்கள் பொதுமக்கள் மற்றும் அரச நிறுவணங்களின் முன் அனுமதியுடன் கலந்தாலோசனை தீர்மானங்களுடன் குறித்த திட்டத்தினை முன்னெடுக்கலாம் என இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நாசிவன் தீவு கிராமத்திற்கான குடிநீர் வசதியினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.