குருந்தூர் மலைக்கு சென்று  நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்

சண்முகம்  சண்முகம்

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவர்களின் அனுமதியோடு குருந்தூர் மலைக்கு சென்று  நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேசசபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினர் 27.01.2021 இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.தொல்லியல் திணைக்கள அனுமதி வழங்கப்பட்டால் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்களபணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி இராணுவம் குருந்தூர்மலைக்குச் செல்ல தடைவிதிக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட தொல்பொருள் திணைக்களத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குள் அழைத்துச்சென்றனர்.

அங்கு சென்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அங்கு இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் மற்றும், அங்கு நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், அங்கு ஆதி ஐயனார், ஆதி சிவன் இருந்த இடத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்

தற்போது குருந்தூர் மலை பகுதியில் பொலிசார் இல்லாது இராணுவத்தினரே மலைக்கு செல்லும் மக்கள் மற்றும் ஆலயத்தின் வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்கள் அரசியல் பிரமுகர்களை தடுத்து நிறுத்துகின்றனர்

எவ்வாறாயினும் மலைக்கு சென்றவர்கள் கீழே வந்தபோது முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகைதந்திருந்தனர்