விடுபட்டது கல்முனை.

(எஸ்.அஷ்ரப்கான்-)

கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் கடந்த 28 நாட்களாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த கல்முனையின் 11 கிராம சேவகர் பிரிவு பிரதேசம் இன்று (24) மாலை 6.00 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 28ம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்த நிலையில் (28 நாட்களாக) மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். பெரும் பொருளாதார நஸ்டம் மற்றும் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளில் பெரும் பின்னடைவை எதிர்கொண்ட நிலையில் இன்று (24) கல்முனை குறித்த பிரதேசம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு இன்று குறித்த பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பொதுச் சந்தை, கடைகள், பள்ளிவாயில்கள், பொது நிறுவனங்களும் மற்றும் உள்ளுர் வீதிகளும் வீதித்தடைகள் நீக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.

இப்பிரதேசங்களில் கடமையில் இருந்த இராணுவத்தினர் முற்றாக குறித்த பிரதேத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் பிரதேச மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.