மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் இரு வேறு பிரதேச செயலக பிரிவு கிராம உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்.

மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கீழ் அங்கத்துவம் வகிக்கும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் செம்மன்னோடை கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் M.M அன்வர் சதாத் அவர்கள் தனது கடமைப்பிரிவில் பொது மக்களுக்கான நிவாரணப்பணியினை மேற்கொண்டிருந்த போது 07 நபர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் 11.01.2021 அன்று நடைபெற்றது. அதே போன்று தனது கடமையில் அலுவலகத்தில் தரித்திருந்த போது கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் மாங்கேனி கிராம உத்தியோகத்தர் சீ.கஜேந்திரன் அவர்கள் தகாத வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டு ஒருவரால் அலுவலக மேசைகள் மற்றும் ஆவணங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவம் 12.01.2021 அன்று நடைபெற்றது.

இவ் இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ள போதும் 1வது சம்பவம் தொடர்பில் இருவரை மாத்திரம் கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர். ஏனைய. ஐந்து பேரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன் 02 வது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கைதாகவில்லை. இவ்விடயம் தற்கால சூழ்நிலையில் வேடிக்கையாக உள்ளது.

அரச உத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனான சேவையாற்றுகின்ற விடயம் யாவரும் அறிவீர்கள் அதுமட்டுமன்றி எமது மாவட்டத்தில் உள்ள 345 பிரிவுகளிலும் 261 கிராம உத்தியோகத்தர்களே உள்ளனர். ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பதில் கடமையே ஆற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில் அரசினால் வழங்கப்படும் பொறுப்புக்கள், கடமைகளுக்கு மேலாக பொதுமக்களுக்கான சேவையில் தம்மை அர்ப்பணிக்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் மதிப்பு இதுதானா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கின்றது. அதுவும் தற்கால சூழ்நிலையில் கொரனோ தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள், வெள்ள அனர்த்தம் என பல்வேறு சேவைகளை பல திணைக்களங்களுடன் ஆற்றும் கிராம உத்தியோகத்தர்களை மதிக்காது இவ்வாறு அசமந்தமாக நடக்கும் பொதுமக்களுக்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன், உரிய சட்டநடவடிக்கையினை காலம் தாழ்த்தாது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பிரதி காவல்துறை அதிபர், அரசாங்க அதிபருக்கும் அறிவித்துள்ளோம்.

இவர்கள் கைது செய்யப்பட்டு விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டத்தில் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவேண்டி வரும் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.

செயலாளர்
ஐக்கிய கிராம உத்.சங்கம்
மட்டக்களப்பு.