கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் சாய்ந்தமருது நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Corona virus test kit - Swab sample for PCR DNA testing

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் இன்று தாக்கல் செய்த மனு நேற்று புதன்கிழமை (06) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை விசாரணைக்காக ஏற்றுக்கொண்டு, இக்கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.

இம்மனு சார்பில் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

இந்த நீதிமன்ற கட்டளை தொடர்பில் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் விபரிக்கையில்;

கடந்த 2020/12/21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாய்ந்தமருது-01, பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவர் அன்றைய தினமே வைத்தியசாலையில் மரணித்திருந்தார்.

அன்றைய தினம் அந்த உடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர், மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு, அந்த உடலத்தில் இருந்து பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு, மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் வைதேகி பிரான்சிஸ் என்பவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதன் மீதான பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையானது மேற்படி வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் ஒரு பரிந்துரையாக, குறித்த நபரின் உறவினர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் செய்யுமாறும் அறிவுறுத்தபட்டிருந்தது.

அதனடிப்படையில், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு  மேற்குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், அவரது பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்துமாறும் அவருக்கு கொவிட் தொற்று இல்லையெனில், உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறும் அவரது குடும்பத்தினரால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், தான் மேலும் ஒரு குழுவினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது எனத்தெரிவித்து, இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை வெளியிடாமலும் உடலத்தை குடும்பத்தினரிடம்  ஒப்படைக்காமலும் தவிர்த்து வருகின்றார். அத்துடன் மரணத்தவரின் புதல்வரது எழுத்து மூல கோரிக்கைக்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமலும் தவிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் வ்வாய்க்கிழமை (05) என்னை நேரடியாக சந்தித்து, இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அந்த உடலத்தை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு என்னால் கோரிக்கை கடிதம் ஒன்று அன்றைய தினமே அவசரமாக கையளிக்கப்பட்டது. எனினும் அதனை விடுவிக்க அவர் முன்வரவில்லை.

இதையடுத்து, இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 162 இன் கீழ் தனிப்பட்ட பிராதாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) என்னால் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது நேற்று ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதில் திருப்தியுற்ற நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை 66 இன் கீழ் குறித்த பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது- என்றார்.