தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறிவள்ளிபுரம் மக்கள்

இலவச குடிநீர் இணைப்புக்களை எதிர்பார்க்கின்றனர்.பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்

வி.சுகிர்தகுமார்

தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறிவள்ளிபுரம் மக்கள் இலவச குடிநீர் இணைப்புக்களை எதிர்பார்ப்பதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறு பெற்றுக்கொடுக்கும் எண்ணம் கொண்டவர்கள் முன்வருமாறும் இது தொடர்பான தகவல்களை தன்னிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குடிநீர்ப்பிரச்சினையை எதிர்கொண்டு மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழும் குறித்த குடும்பங்களில் 20 குடும்பங்களுக்காக இலவச இணைப்பை அறம் அறக்கட்டளை நிதியம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அங்குவாழும் மேலும் 66 குடும்பங்களும் இலவச குடிநீர் இணைப்பை வேண்டி நிற்கின்றனர்.
இவ்வாறு வேண்டி நிற்கும் மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
குறித்த பிரதேசத்தில் 86 குடும்பத்தினை சேர்ந்த 360 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். மேலும்; 1956ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து வெளியேறி இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக அனுராதபுர மாவட்ட தம்புத்தேகம மற்றும் ரம்பேவா பகுதியிலிருந்தும் மொனறாகலை மாவட்டத்திலிருந்தும் இங்கு வருகை தந்துள்ளனர். மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அளிக்கம்பை கிராமத்துடனும் தொடர்பினை கொண்டவர்கள்.
இவர்கள் இங்கு குடியேறிய காலம் குடிநீர் இணைப்பு வசதியின்றியும் சுத்தமான குடிநீரின்றியும் சொல்லொனா துயரங்களை சுமந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் சப்ரிகம எனும் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கை திட்டத்திற்கு அமைய இக்கிராமத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் மூலம் திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலிருந்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் வழங்கும் குழாய் இணைப்பு குறித்த கிராமம் வரை செய்யப்பட்டது.
எனினும் குடியிருப்புக்களுக்கான நீரிணைப்பை பெற்றுக்கொள்வதற்கான 5000 தொடக்கம் 12000 வரையிலான பணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் இம்மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
காரணம் இவர்கள் அன்றாட கூலிவேலை மற்றும் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்வதே ஆகும்.
இச்சந்தர்ப்பத்திலேயே குறித்த குடும்பங்களில் 20 குடும்பங்களுக்காக இலவச இணைப்பை அறம் அறக்கட்டளை நிதியம் ஏற்படுத்தி கொடுத்துள்ள நிலையில் அங்குவாழும் மேலும் 66 குடும்பங்களும் இலவச குடிநீர் இணைப்பை வேண்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.