மட்டக்களப்பில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு. முன்னாள் தளபதியும் கைது.

(ரீ.எல்.ஜவ்பர்கான்- க.சரவணன்)
சட்டவிரோதமான முறையில் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களினை  இன்று மாலை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைப்பற்றபபட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்குக்கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையில் மாவட்ட சிரேரஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிசின் வழிகாட்டலில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறின் ஆலோசனையின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினாரால் இவ் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின்  ஜெயந்தன் படையனியின் தளபதியாக  1991 இருந்து 1994 வரை இருந்துள்ளதாகவும் பின்னர் குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுவருவதுடன் அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் கல்உடைப்பதற்கு வெடிபொருட்களை பயன்படுத்தி கல்உடைத்து வந்துள்ளதாகவும். கடந்த மாதம் கல்உடைக்கும் அனுமதிப்பத்திரம்  முடிவடைந்துள்ளதாகவும். அதன் பின்னர் வெடிபொருட்களை கொள்வனவு செய்து சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பவிசாணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்..