சாய்ந்தமருதில் சுத்தம், சுகாதாரம் பேணப்படாத கோழிக் கடைகள் மீது நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் சில கோழி இறைச்சிக் கடைகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்படாத நிலை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

சாய்ந்தமருது பிரதேசத்தில்  வெள்ளிக்கிழமை (01) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின்போது சில கோழி இறைச்சிக் கடைகளில் சுத்தம், சுகாதாரம் பேணப்படாத நிலையும் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதும் எம்மால் அவதானிக்கப்பட்டது.

04 கோழி இறைச்சிக் கடைகளும் 02 மாட்டிறைச்சிக் கடைகளும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 02 கோழி இறைச்சிக் கடைகள் மிகவும் அசுத்தமான நிலையிலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் மிக மோசமான நிலையில் காணப்பட்டன.

பொதுவாக அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் அங்கேயே கோழி அறுக்கப்பட்டு, அவற்றின் கழிவுகளும் அங்கேயே இருக்கத்தக்கதாக வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. இது சுகாதாரத்திற்கு மிகவும் கேடாகும்.

அத்துடன் அனைத்து கோழி இறைச்சிக்கடைகளின் கழிவுகளையும் ஒவ்வொரு நாளும் சேகரித்து அகற்றுவதற்காக மாநகர சபையினால் நாளாந்தம் திண்மக்கழிவகற்றல் வாகன சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சில கடைகளின் கழிவுகள் பொலிவேரியன் ஆறு, தோணாக்கள் உள்ளிட்ட நீரோடைகளிலும் பொது இடங்களிலும் கொட்டப்படுவதும் கண்டறியப்பட்டது.

அதேவேளை இப்பரிசோதனையின்போது, பொலிவேரியன் பகுதியில் கொட்டுவதற்காக கோழிக்கடையொன்றின் கழிவுப்பொதிகளை எடுத்துச் செல்லும்போது ஒருவர் எம்மால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக அவரிடம் விபரங்களை பெற்றுள்ளோம். அடுத்தடுத்த நாட்களில் ஏனைய இடங்களிலும் இறைச்சிக்கடைகள் மீதான பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

எமது பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து, இவ்வாறு சுத்தம், சுகாதாரம் பேணப்படாமலும் இறைச்சிக் கடைகளுக்கான ஒழுங்கு விதிகளை பின்பற்றாமலும் நடத்தப்படுகின்ற கடைகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதற்கும் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் இப்பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.