மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் 2021 ஆம் ஆண்டினை வரவேற்று அரச சேவை உறுதி உரையும் சத்திய பிரமாணமும் நடைபெற்றது.

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வானது அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று நோய் அச்சத்திற்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளிகளை கருத்திற்கொண்டு இவ் வைபவம் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி தர்சினி கலந்து கொண்டு கொரோனா தொற்றிலிருந்து அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் வீண்பயம் இன்றியும் போசாக்கான உணவுகளை உட்கொள்வது 6 தொடக்கம் 8 மணித்தியாலங்கள் இரவு நித்திரை செய்வது உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற விடயங்களில் கவனஞ் செலுத்துவதுடன் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து சமூகத்தில் ஏனையோருக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் தங்களையும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள இப்புதுவருடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களை காப்பாற்றுவதற்கு என தன்னோடு சேர்ந்த சுகாதார பகுதியினர் தொடர்ச்சியாக பணியாற்றுவார்கள் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அரசாங்க அதிபர் க. கருணாகரன் உரையாற்றுகையில் சுபீட்சத்தின் நோக்கை முன்னிறுத்தி ஒழுக்கமான சட்டத்தை மதிக்கின்ற பண்பாடுகளை கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் செயலாற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில்  நவீன தொழில்நுட்பத்தின் அறிவைப்பெற்ற மனித வளங்களை வழிநடத்தும் பரிசுத்தமான அரச நிர்வாகத்தை வினைத்திறனுடன் பயனுறுதி வாய்ந்ததாக உறுதியான எண்ணத்துடன் உச்ச அளவு அற்பணிப்புடன் நேர்மையாக மக்கள் சார் பணியினை அனைத்து அரச உத்தியோகத்தர்களும் திறம்பட ஆற்ற வேண்டுமெனவும் இப் புத்தாண்டில் ஆற்றுவதற்கு முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன் ,உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன் மற்றும் மாவட்டச் செயலக கிளைத்தலைவர்கள் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்