மட்டு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டிய பணிப்பாளர்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் உதவியாளர்களின் தேவைப்பாடுகள் தற்போதைய நிலைமையில் அவசரமாக தேவைப்படுவதாகவும் அதற்கு மேலதிகமாக கட்டிட வசதிகள் இன்மையால் நோயாளர்களை உரியமுறையில் பராமரிக்க முடியாது உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் குறைபாடுகளுடன் செயற்பட்டு வருகின்ற திணைக்களங்களின் முன்னேற்ற அறிக்கை மற்றும் அத் திணைக்களத்தில் உள்ள குறைபாடுதொடர்பாக இன்று மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு திணைக்களத்தலைவர்களும் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். இக்கூட்டத்திலேயே பணிப்பாளர் மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

குறிப்பாக மட்டக்களப்பில் கல்வி, சுகாதாரம் , சமூக பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்கள, பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஏ. மயூரன் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கணேசலிங்கம் கலாரஞ்சினி, தொழில் நுட்ப கல்லூரி அதிபர, ஆசிரிய கலாசாலை பிரதிநிதி, கல்வியற்கல்லூரி பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் குறித்த திணைக்களங்களிலே காணப்படுகின்ற பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக  தங்களின் வேண்டுகோள்களை முன்வைத்தனர். இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு இப் பௌதீக வளங்களுக்கான நிதியினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.