அரசியலுக்கு  அப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பொன்றாக  “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்

(எஸ்.அஷ்ரப்கான்)

“ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனின்“ மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டிய  நினைவுக்கட்டுரை.

அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது முழுத்தேசியத்திற்கும் அபிவிருத்தியில் ஒரு ஜாம்பவானாக இருந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் என்றால் அது மிகையாகாது. இன்றும் கூட பெரும்பாலான இடங்களில் அவரது அபிவிருத்தியின் அடையாளங்களே மாறாமல் காட்சி தருகிறது என்பது ஒரு வரலாறாகும். இவரது மறைவுக்கு பின்னர் அவருடைய இரண்டாவது மகளான சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்களினால், தனது தந்தையின் நிழல் எம் சமூகத்தின் மீது என்றும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலுக்கு                           அப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பொன்றாக  “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்” அமைப்பு உருவாக்கப்பட்டது. இது முற்றிலும் மாறுபட்ட ஓர் சமூக சேவை அமைப்பாகும்.

அமைப்பின் நோக்கங்களும் வகிபாகங்களும்.

எமது பிரதேசத்தில் நிலையில்லா வறுமையை காரணம் காட்டி நிலையான கல்வியை  யாரும் இடை நிறுத்தக்கூடாது.

அரசாங்க போட்டிப் பரீட்சைகளுக்காக தயார்ப்படுத்தல் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துதல். அத்துடன் உடல் உள சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்களை நடாத்துதல்.

எமது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் உரிமைகளையும் மற்றும் அநீதிகளையும்  சட்ட ரீதியாக ஆராய்ந்து   தீர்த்தல்.

அரச வேலை வாய்ப்புக்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய மானியங்கள் மற்றும் உரிமைகள் என்பவற்றை அறியப்படுத்தல். அத்துடன் சுய வேலைவாய்ப்புக்களில் ஈடுபடவும் ஊக்குவித்தல். ஆகியவற்றை முக்கிய பிரதான நோக்காகக் கொண்டும், பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்புக்கு அமைய “புதிய கிளை நோக்குகளை”அமைத்து, பிரதேசவாத மற்றும் மத வாதங்களுக்கு அப்பால் சேவையாற்றும் அமைப்பே இவ்வமைப்பாகும்.

2021 ஆண்டின் பிரதான திட்டங்கள்

கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வியினை ஊக்குவிக்குமுகமாக  “ஒரு பிள்ளைக்கு ஒரு புத்தகம் ”One child One book எனும் செயற்திட்டத்தினை அறிகமுகப்படுத்தல்.

அம்பாறை மாவட்டத்தில் இலவச பிரத்தியேக வகுப்பறையுடன் E-libray இலத்திரனியல் நுாலகம் ஒன்றை நிறுவுதல். இதற்கான வேலைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

பாடசாலைக்கு ஓர் நூலகம் திட்டம் மூலம் கிராமப்புற பாடசாலைகளுக்கு நுாலகங்களை அமைத்து அப்பாடசாலைகளை கட்டியெழுப்புதல்.

உலகபுகழ் பெற்ற ஆங்கில  spelling bee (எழுத்து தேனீ) போட்டியை எமது பிரதேச மாணவர்களுக்கும்  அறிமுகப்படுத்தல்.

இலங்கை நிர்வாக சேவை மற்றும் சட்டத்துறை   பரீட்சைகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களை நடாத்துதல். அத்துடன் தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் நடாத்துல்.

வருகின்ற 2021 ஏப்ரல் மாதம் மாபெரும் பெண்கள் கைத்தொழில் கண்காட்சியும் கௌரவிப்பும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

கடந்தகால செயற்திட்டங்கள்.

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசன் கடந்த 2017 டிசெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இதுகாலவரை மூன்று ஆண்டுகளை கடந்துள்ள இவ்வமைப்பு, சமூகத்திற்கு பிரயோசனமான பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த அமைப்பின் சேவைகளை நாம் நோக்கும்போது, கல்முனை பிரதேசத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும்  கௌரவிக்கப்பட்டார்கள். 2018.11.30 மாணவர்களுக்காக தொழில்வழிகாட்டால் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

28.12.2018 இல் இஸ்லாமாபாத் முஸ்லீம்  வித்தியாலயத்தில் முக்கிய தேவை உடைய 250 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2019ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் அனைத்து கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

12.01.2019 சனிக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் வாழ்வும் பணிகளும் நூல் வெளியீடு இடம்பெற்றது.  அதுபோல் 06.03.2019 பாடசாலை ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிற்சி  ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனால் வழங்கப்பட்டது.

15.04.2019 இல் மாவட்ட ரீதியில் மாணவர்களின் எழுத்தாற்றலையும் சிந்தனைத் திறனையும் பேச்சாற்றலையும் விருத்தி செய்யும் நோக்குடன் மாபெரும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளை “போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம்” என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கு நடாத்தி வெற்றி பெற்றவர்களையும் சிறப்பாக கௌரவித்தது.

07.05.2019 இல் இவ்வமைப்பினால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள முக்கிய தேவையுடைய  மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

10.05.2019 இல் இலங்கை அரசினால், அவசரகால சட்டத்தின் கீழ் இலங்கையில் கொண்டு வரப்பட்ட, முஸ்லிம் பெண்களின் முகத்திரை மீதான தடையை இலங்கை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தடையும் இன்றி ஏற்றுக் கொண்டனர். அதை சில இனவாதிகள் பிழையாக சித்தரித்து ஹிஜாபை கழற்றும்படி  வற்புறுத்தி, மனித உரிமைகளை மீறும் படியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் முதன்மையாகவும் முன்மாதிரியாகவும் இவ்வமைப்பு வழங்கியது.

11.05.2109 இல் எமது அமைப்பின் ஸ்தபாகரும் சட்டத்தரணியும் அவுஸ்திரேலிய குடிவரவு ஆலோசகருமான மரியம் நளீமுடீன் அவர்களினால் கல்முனை பிரதேச மாணவர்களுக்கான இலவச அவுஸ்திரேலியவுக்கான விசா சம்பந்தமான விழிப்புணர்வும் உதவித் திட்டமும் வழங்கிவைக்கப்பட்டது.

19.05.2019 இல் “அபாயா அணிவதற்கு எதிராக யாரேனும் செயற்பட்டால் இவ்வமைப்பை தொடர்பு கொள்ளுங்கள், உங்களது உரிமைக்காக  அமைப்பு குரல் கொடுக்க தயாராக உள்ளது”  என்பதை  இலங்கையில் முதன் முதலில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்ததுடன் நேர்காணல்களும் வழங்கியது. பின்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு இப் பிரச்சினையை எத்தி வைத்தது.

27.05.2019 இல் மஹியங்கனையைச் சேர்ந்த அப்பாவி பெண் மசாஹிமாவை அவர் அணிந்து இருந்த சட்டையில் தர்ம சக்கரம் போன்ற வடிவிலான ஓர் சின்னம் இருந்ததாக போலியாகக் கூறி செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்தார். அந்தப் பெண்ணின் கணவரையும் மகளையும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்ட ரீதியாக ஆலோசனையும் சட்ட ரீதியான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அமைப்பால் முடியுமான உதவிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வெற்றியீட்டியுிருந்தது.

11.06.2019 இல் அலுவலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் அபாயா ஆடைக்கு எதிரான சுற்றுநிரூபம் இரத்து செய்யப்பட்டு முஸ்லிம் பெண்கள் தைரியமாக அபாயா அணிந்து செல்லலாம் என்ற உரிமை மீளமைக்கப்பட்டது. இச்செயற்பாட்டில் எமது அமைப்புக்கு பெரும் பங்குள்ளது என்பது பல ஊடாகங்களிலும் வெளிவந்தது.

08.08.2019 அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்தியமை மற்றும் 28.09.2019 இல் சனிக்கிழமை அன்று கமு/கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மாவட்ட ரீதியில் ஏற்பாடு செய்த மாபெரும் கவிதை, கட்டுரை பேச்சு போட்டியானது அதிக போட்டியாளர்களின் பங்குபற்றல்களுடன் நடைபெற்றது.

2019.12.05 அவுஸ்திரேலியா செல்ல தகைமையுடையவர்களுக்கான இலவச அறிவுரையும் வழிகாட்டலும் வழங்கப்பட்டதுடன் 2019.12.10 (Hypothyroidism) மருத்துவ ஆலோசனை விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.

22.12.2019 இல் மாபெரும் கவிதை, கட்டுரை பேச்சு போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் மாளிகைக்காடு பாவா ரோயலி மண்டபத்தில் நடாத்தப்பட்டது. அத்துடன் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஆவண ஒளித்தொகுப்பும் வெளியிடப்பட்டது.

09.01.2020 இல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் வேலைத் திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியாகவும் முதன்மையாகவும்  இவ்வமைப்பினால் கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் முன்பாக இவ்வேலைத்திட்டம் அங்குராப்பணம் செய்யப்பட்டது.

21.03.2020 இல் 2020 இற்கான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “பெண்மையை போற்றுவோம் கொண்டாடுவோம்” எனும் விருது வழங்கல் விழாவானது தென்கிழக்கிலங்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து பாராட்டப்பட வேண்டிய சாதனைப் பெண்களை கௌரவிக்கும் ஒரு பிரமாண்டமான விழா ஒன்றை இவ்வமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் தற்கால சூழ்நிலை காரணமாக இவ்விழா பிற்போடப்பட்டுள்ளது.

25.03.2020 இல் எமது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தினால் தங்களது அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படும் அம்பாரை மாவட்டத்தில் அதிகமானவர்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.

2020.04.10 கொவிட் மக்கள் விழிப்புணர்வும் மருத்துவ உதவியும் வழங்குவதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. 2020.04.21பெண்களுக்கான வீட்டு வன்முறைகளைக் குறைப்போம் எனும் தொனிப்பொருளில் பெண்கள்  விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

2020.05.06 அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவர்கள் கொரோனாவை புத்தகங்களின் துணையோடு கடக்கும் நோக்குடன் “வாசிக்கும் சமூகத்தினை வித்திட, சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் வாசிப்பு தினம் மற்றும் உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இக்காலத்தில்  சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், அதன் மூலம் உருவாகின்ற அபிமானத்துடன், எதிர்கால வாசிக்கும் சமூகத்தை வித்திடும் அபிலாஷைகளுடன் பவுண்டேசன் வாசிப்பு,சித்திர மற்றும் கதை சொல்லுதல் போட்டிகளை நடாத்த திட்டமிட்டு, அதில் முதல் கட்டமாக கதை சொல்லல் போட்டியை நடாத்தியிருந்தது.

2020.07.02 தற்போது  கொரோனா வைரஸ் தாக்கம்   “ஒர் இரண்டாம் கட்டப்பரவலா? என்பது தொடர்பிலும் இதிலிருந்து மக்களை பாதுகாக்க  என்ன செய்யலாம் என்பது தொடர்பிலும் “டாக்டர்_நளீம்தீனின் மருத்துவ ஆலோசனை விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.

25.07.2020  மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 3 வது நினைவை முன்னிட்டு  ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனின் “கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களை பூரணப்படுத்துவோம்” எனும் வேலைத்திட்டத்தினூடாக பாலமுனை “ஹைமா” பள்ளிவாசலுக்கு முதற்கட்டமான  “குழாய்க்கிணறு மற்றும் நீர்த் தொட்டித் தொகுதி என்பன அமைத்துக் கையளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக அப்பள்ளிவாசலுக்கு “நகரப்புற பள்ளிவாசல்களில்  காணப்படும்  வுழு செய்வதற்கான பிரத்தியேக அறை” போன்ற ஒரு  அறையினையும்  அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இச்செயற்திட்டானது சூழ்நிலைகளுக்கேற்ப முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

29.08.2020 சிறுவர்கள் கொரோனாவை  புத்தகங்களின் துணையோடு கடக்கும் நோக்குடன் ” வாசிக்கும் சமூகத்தினை வித்திட , சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப் பொருளில்; சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், அதன் மூலம் உருவாகின்ற அபிமானத்துடன் எதிர்கால வாசிக்கும் சமூகத்தை வித்திடும் அபிலாஷைகளுடனும் அமைப்பினால் நடாத்திய “கதை சொல்வோம் – பரிசு வெல்வோம்” போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய அனைவருக்குமான பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

07.11.2020 வெற்றிகரமான தேசத்தை உருவாக்க ஆரோக்கியமான ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டும் எனும் தொனிப்பொருளில்  நவம்பர் மாதமானது ஆண்களின் சுக நல விழிப்புணர்வு மாதமாக சர்வதேச ரீதியாக பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது போன்று, இலங்கையிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி; மருத்துவ விழிப்புணர்வு மற்றும் உதவிகளையும் செய்தது.

14.11.2020 சர்வதேச நீரிழிவு நோய் தினத்தினை முன்னிட்டு பவுண்டேசனின்  மருத்துவ விழிப்புணர்வு டாக்டர் அஹமட் பரீட் (Consultant Physician, Base Hospital Akkaraipattu) அவர்களால் நடாத்தப்பட்டது.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தினை (International Day for the Elimination of Violence against Women)  முன்னிட்டு பவுண்டேசனின் நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

இவ்வாறு பல்வேறு செயற்திட்டங்களுடன் குருகிய காலத்தில் பிரதேச மக்களுக்கு பாரிய சேவைகளை செய்து வருகின்ற உயிரோட்டமுள்ள அமைப்பொன்றாக  “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்”செயற்பட்டு வருகின்றமை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.