பன்னீர் வாசம் பரவுகிறது… -மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் பற்றிய நினைவுக் குறிப்புக்கள்

ஜெஸ்மி எம்.மூஸா-
தமிழை உச்சரிக்கவும் உரையாடவும் தெரியாத பலர் எழுத்தாளர்களாகி பட்டங்களையும் கௌரவங்களையும் சூட்டிக் கொள்கின்ற வில்லங்கத்துக்குரிய கால ஓட்டத்தில் தமிழை தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பழகுநிலையினிலும் ஆதர்சித்தவர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்.
எட்டு தசாப்தங்களை (1940.04.01) நிறைவாக்கி அதில் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமாக எழுத்திலக்கியப் பணிகளைப் பத்திரப்படுத்திவிட்டு 26.12.2020 இல் எம்மை விட்டுப் பிரிந்தார் என்பது சாமான்யமான செய்தியல்ல.
ஒரு கல்வியலாளராக, கவிஞராக, சிறுகதையாளராக, நடிகராக, ஆய்வாளராக, கட்டுரையாளராக ஒலி-ஒளிபரப்பாளராக, தன்னிலை இழுக்கும் சுவைமிக்க பேச்சாளராக இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியத்தை வாழ வைக்கும் கலைஞராக தொடர்பணியாற்றி விட்டு எம்மை விட்டுச் சென்ற மணிப்புலவரின் ஆளுமைகளும் இலக்கிய கருவூலங்களும் எதிர்கால சமூகத்திற்கான கலைக்களஞ்சியமே அன்றி வேறில்லை.
எழுத்தியல்சார்பானவர்கள் பிறக்கிறார்கள் அல்லது உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள் எனப்பல கருத்தியல் இருந்த போதும் மரபு வழி அல்லது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வருகின்றவர்கள் பலர் சாதித்திருக்கிறார்கள் என்பதை மறுதலிக்க முடியாது.

இயல்பான சூழல் அவர்களை இழுத்துச் செல்லவாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. வரலாற்றுக் காலங்களில் பள்ளுப்பாடல்களும் வசைப்பாடல்களும் புலவர்களை நிலைபேறாக்கியதைப் போல மருதூர் ஏ.மஜீதின் தந்தை இப்றாஹிம் அலியார் ‘பள்ளுப்பாட்டுப்புலவர்” “வசைப்புலவர்” என்றெல்லாம் அழைக்கப்பட்டதாகக் கிடைத்திருக்கும் ஆய்வுத் தகவல்கள் மணிப்புலவரின் இலக்கியத் தடவலுக்கு வழியேற்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது.

அவரது சகோதரர்களான எழுத்தாளர்- கல்வியலாளர் பீர்முகம்மட், சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹ_ம் அலிகான், மருதூர் ஏ.ஹசன் என எல்லோருமே இத்துறைக்கள் தடம் பதித்திருப்பது கவனயீர்ப்புக்குரியதொன்றாகும்.
தாம் பெற்றதை அல்லது ரசித்ததை ஒப்புவிக்கின்ற உந்துகை எழுத்தாளன் ஒருவனிடமிருக்கின்ற ஆளுமைகளில் ஒன்றாகவே கொள்ள முடிகிறது. புதுமைப்பித்தன் வழி நின்று ஒரு பட்டியலையே அடையாளப்படுத்தலாம். இவ்வாறானதொருவராகவே மணிப்புலவர் மஜீதையும் அடையாளம் காணவேண்டியுள்ளது. தமக்குச் சரியெனக் காண்பதை அல்லது அறிந்ததை எழுதவும் பேசும் தயங்காத “தில்” அவரை எழுத்துலகில் அடையாளம் செய்யவும் வாழவும் வைத்திருக்கிறது.

அவர் முன்னிலையிலேயே இது பற்றி நாம் சிலாகித்த மேடை அனுபவங்கள் திருப்தியான இலக்கியப் பணியின் மீட்டலே.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி, தினக்குரல் என ஈழத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிவந்த சஞ்சிகைகள் பலவற்றிலும் இவர் எழுதினார்.

இளம்வயது முதலே தமிழ் இலக்கியத்தில் நாட்டமும் புலமையும் உடைய மணிப்புலவர் வெண்பாவையும் கற்றுக் கொண்டார். எனினும் நவீன கவிதையாளர்களுடன் பயணிக்கும் வகையில் தமது மொழிக்கலவையினை ஆக்கிக் கொண்டார். பன்னீர் கூதலும் சந்தனப் போர்வையும், மூடமறுக்கும் விழிகளும் துடிக்கும் இதயமும் , கோயில் மாடும் கோட்டல் பூனையும் என்பன இவரது குறிப்பிடத்தக்க கவிதைப் பிரதிகள்.

அவரது கற்பனைக்கும் சொல்லடுக்குள்ள வெளிப்படுத்தல் பாணிக்கும் உணர்வுகளின் உந்துதல் வீச்சின் பீச்சலுக்கும் கட்டியம் கூறுகின்ற பிரதியாக 2017 இல் வெளியிட்ட “கோயில் மாடும் கோட்டல் பூனையும்” பிரதியாக்கத்தை திருஷ்டாந்தமாகக் குறிப்பிடலாம்.
புலவர் மஜீத்இ மாஸ்டர் மஜீத் இ மணிப்புலவர் மஜீத் எனப் பல பெயர்களில் வலம் வந்த மருதூர் ஏ.மஜீத் பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
கவிதையாக்கத்தில் அதிக அக்கறை காட்டிய ஒருவராக மஜீத் திகழ்ந்தபோதும் சிறுகதையினூடாகவே தமது பிரதி வெளிப்பாட்டினை அடையாளப்படுத்தினார். “கருப்பையா” என்ற தினகரன் சிறுகதை மூலம் தம்மை அடையாளப்படுத்திய மணிப்புலவர் மஜீதின் “பன்னீர் வாசம் பரவுகிறது” சிறுகதைத் தொகுதி(1979) அவரை அதிகம் பேசவும் தேடவும் வைத்தது.

தம் அனுபவ இயலில் கண்டு கொண்ட அல்லது காண எத்தனித்த சமூகச் சித்திரமாகவே இப்பிரதி அமைந்தது. மூடநம்பிக்கைகளுக்கும் சமூகச் சொல்லியல் அம்சங்களுக்கும் எதிரான கலகக் காரனாகவும் முற்போக்காளனாகவும் தரிசிக்க வைக்கும் கதைகளுக்குச் சொந்தக்காரனாகவே மருதூர் மஜீதைக் இவைகளினூடாகக் காணமுடிகிறது. முஸ்லிம் பர்திரங்களையும் கதையாடல்களையும் உள்வாங்கினால் தூர நோக்கில் வைக்கப்படும் மதிப்பீட்டியலுக்கு அப்பால் நின்று தமது பேசுபொருளை அமைத்த சிறுகதையாளனாகவே மணிப்புலவரை அவதானிக்க முடிகிறது. “கூடுகட்டத் தெரியாத குயில்கள்”(2009) என்பதும் இவரது சிறுகதைப் பிரதிகளில் கவனத்திற்குரியதே
தமது பயண அனுபவங்களாகவும் ஆய்வுகளாகவும் கட்டுரைகளும் தொகுப்புக்களும் வந்தேறியுள்ளன. “மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள்”(1990) மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை(1995) தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு(2001) தழிழ் மொழியின் பூர்வீக வரலாறு செம்மொழி சீர்திருத்தம் தொடர்பான ஆய்வு(2012) முதலியன இவ்வகைகளுக்குள் குறிப்பிடத்தக்கன
தென்கிழக்குப் பிரதேச முஸ்லிம்களின் நாட்டாரியல் கூறுகளை ஆய்வியல் ரீதியாக வெளிக்கொணர்ந்தவர்களுள் மருதூர் ஏ.மஜீத் முக்கியமானவர். மொழி வழக்குகளோடு பண்பாட்டியல் அம்சங்களை அடையாளப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வ மிகுதியை “ தென்கிழக்குப் பிரதேசத்தாரின் நாட்டாரியல்” ஆய்வுத் தேடலினூடாக உணர்ந்து கொள்ளலாம்.

“அனுபவத் தேறலின் கரைசல் இலக்கியம்” என்கின்ற முருகையன் போன்றோரின் கோட்பாட்டியலிலிருந்து மாறாத எழுத்துக்கள் மணிப்புலவரிடம் நிறையாடியுள்ளது. “இளமையின் இரகசியமும் நீடித்த ஆயுளும்”(1996) “நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புக்களும்”(1997) ஆகியன மேற்கூறிய வகைமாறிகளுக்குரியன. இவை அறிவியல் ரீதியான கோடிடலாக ஆசிரியரளவில் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் பொது ஆய்வியலுக்கு முட்டிடக் கூடியதாக அமைந்திருந்தன எனக் கூறிடவும் முடியாது

பிரதேச ரீதியாகவும் அம்பாறை மாவட்டம் தழுவிய விதத்திலும் முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பில் காலகட்டப் பிரதிகள் வெளிவந்த நிலையில் “தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு”(2001) என்ற நூலை மணிப்புலவர் கொண்டு வந்தார். முஸ்லிம்களின் வருகை குடியேற்றம் பெயர்வந்த வரலாறு இருப்பிடங்களின் தேடல் எனப் பல விடயங்களை தொட்டுள்ளதுடன் ஆய்வத் தேவைக்குரிய கேள்விகளையும் இந்நூலினூடாக விட்டுச் சென்றுள்ளார்.

தன்னை ஒரு மத அடையாளனாக காட்டுவதனை விட தமிழ் விரும்பியாகவும் பொதுவுடமையாளனாகவுமே வாழத் தலைப்பட்டவரே மஜீத். ஆயினும் அவரது மார்க்க ரீதியான தேடல்கள் வியக்கத்தக்க சாட்சியங்களாயின. “இஸ்லாத்தைப் பற்றி இதர மதத்தவர்கள்”(1992) சர்வ மதங்களிலும் நோன்பு(2004) ஆகியன இத்தகைய முயற்சிகளுக்குரியவை
வேர்(2002)இ போருக்கப்பால் மனிதநேயம் தேடல்(2009)இ இதுவொரு தங்க நூல்(2012) “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்” (2016) உள்ளிட்ட மணிப்புலவரின் பிரதிகளும் கவனிக்கத்தக்கவை. தமிழியல் வெளிப்பாட்டிலும் இந்து மற்றும் இஸ்லாமிய கொள்கையளவான ஆய்வுகளிலும் “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்” எனும் நூல் பல்வேறு கேள்விகளையும் முரனுரைகளையும் எழுப்பியுள்ள போதிலும் இவைகளுக்கப்பால் நின்று தம் கருத்துக்களை பரிசோதனை செய்யும் துணிச்சல் மிக்க எழுத்தாளராக மணிப்புலவர் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
கிராம சங்கத்தின் முன்னாள் தலைவர் தம் தந்தை என்ற பின்புலத்தில் வந்த மருதூர் மஜீத் இலக்கியம் மற்றும் அரசியல்சார்ந்த தொடர்புகளுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃபுடன் நெருக்கமான தொடர்புகொண்டவர். கட்சி அரசியல்சார்ந்த விடயங்களில் தம் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆலோசனை காலங்களையும் அதிகம் செலவிட்டார். தேசிய மீலாத் விழாக்கள் மற்றும் மாநாடுகளின் வெற்றிக்கா உழைத்தவர்களுள் இவரும் ஒருவர். இதன் தொடரில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீம் பற்றி 2002 இல் நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய மாநாட்டில் அவர் வெளியிட்ட நூலே “வேர்” ஆகும்;.
இலங்கைஇ இந்தியாஇ மலேசியா அடங்கலான நாடுகளில் இடம்பெற்ற ஆய்வு மாநாடுகளில் பங்கு பற்றி ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் உரைகளையும் ஆற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்ற “ இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா” மாநாட்டில் கலந்து கொண்டு பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்கில் “இஸ்லாமிய இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆய்வுத் தலைப்புரையினை ஆற்றி எம்மைப் போன்ற இளவல்களுடன் சம கட்டுரையாளராகப் பணியாற்றியமை சுகமான அனுபவங்களே.
இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் கனதிமிக்க இலக்கிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமை மணிப்புலவருக்குண்டு. கவியரங்குகளில் கவிதை முழங்குவதும் தலைமை தாங்குவதிலும் தனித்திறன்வெளிப்பாட்டிற்குரியவராகவே திகழ்ந்தார். மேடைப் பேச்சுக்களில் ஏதாவது ஒரு புதுமை வெளிப்படும் என்கின்ற எதிர்பார்ப்புக்களுடன் அரங்கத்தினைக் காட்டியாளும் சக்தி மருதூர் ஏ.மஜீதிடம் இருந்தது.
இலக்கியமும் எழுத்துக்களும் பேச்சுக்களும் நிறைவானவையாக இருப்பதற்கு அவரிடமிருந்த கல்விப்புலம் முக்கியமாது. தமிழ்த் துறையின் விஷேட பட்டம் பெற்ற இவர் கல்விப்பணிப்பாளரஇ; கல்வியமைச்சின் மாகாண பணிப்பாளர், கலாசாரப் பணிப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கி அப்பதவிகளுக்கான அந்தஸ்த்தை உயரச் செய்தார்.
இளம் எழுத்தாளர்களைத் தூக்கி விடுவதிலும் வழிப்படுத்துவதிலும் வாழும் காலம் வரை தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மணிப்புலவர் நமது நாட்டின் முக்கிய இலக்கியப் பொக்கிஷங்களில் ஒருவர். அவரது எழுத்துக்களிலும் அனுபவப் பகிர்வுகளிலும் நமது எழுத்தாளர்கள் நிறையவே கற்கவேண்டிய பக்கங்கள் உண்டு. மஜீத் என்னும் கருவூலம் எம்மைக் கடந்து சென்றுவிட்ட போதும் அவரது பேச்சுக்களும் தமிழ் வாசமும் பரவிக் கொண்டே இருக்கின்றன
ஜெஸ்மி எம்.மூஸா