நவீன ஊடகத்துறைப்பரப்பில், கிழக்கின் புதிய பரிணாமமாக “சுபீட்சம்” திகழ்கின்றது.

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சலீம்!
(நமது நிருபர் – அகீல்)
“புதிய நவீன ஊடத்துறைப்பரப்பில் கிழக்கின் மண் வாசனையுடன் புதிய பரிணாமமாக “சுபீட்சம்” இணைய நாளிதழ் திகழ்கின்றது வடக்கைப் போன்று கிழக்கிலும் தினசரிகள் வெளிவரவேண்டும்.”
இவ்வாறு, கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத்துறை வாழ்நாள் சாதனையாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் கூறினார்.
நேற்று, கல்முனை பாண்டிருப்பில் இடம்பெற்ற, கல்முனை ஊடகமையத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கல்முனை வலயமைப்புடன் இணைந்து இந்த ஊடகமையத்தை திறந்து வைத்துள்ளது.
மூத்த ஊடக வியலாளர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழா நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன்,
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா, ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கலந்து கொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண ஊடக வியலாளர் ஒன்றியத்தலைவர் தேவ அதிரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா, கல்முனை நெற்பணிப்பாளர் கே.கேதீஸ் உட்பட பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதி நிதிகளும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளுள் ஒருவரான கலாபூணம் சலீம் தொடர்ந்து உரையாற்றுகையில்
“கல்முனைப் பிராந்திய ஊடகவியலாளர்கள் நலன்கருதி இந்த ஊடக மையம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
பல்வேறு தரப்பினருக்கும் நடுநிலையான களம் அமைத்துக்கொடுக்கும் இந்த ஊடகமையம் ஊடகத்துறை வளர்ச்சிப் பாதையில் குறிப்பிடத்தக்கதாகும்.
வடக்கில் இன்று பல தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதுடன் புதிய வார, மாத இதழ்களும் வெளிவந்தவண்ணமுள்ளன.
ஆனால் கிழக்கில் இவ்வாறான தினசரிகள் வெளியிடப்படவில்லை, தினக்கதிர், தமிழ் அலை போன்ற பத்திரிகைகள் முன்னர் வெளியிடப்பட்ட போதிலும் அவை தொடரவில்லை.
ஆயினும் இன்றைய காலகட்டத்தில் கிழக்கின் மண் வாசனையுடன் சுபீட்சம் இணையத் தினசரி (நிகழ்நிலை) இக்குறையைப் போக்கும் வகையில் வெளிவருவது ஆறுதலாகவுள்ளது.
தனக்கென ஒரு வாசகர் கூட்டத்துடன் வெற்றிநடைபோடும் சுபீட்சம், புதிய பல ஊடகவியலாளர் குழுமத்தையும் வளர்த்துவருகின்றது.
இந்நிலையில் சுபீட்சம் உட்பட, மேலும் தினசரிகள் கிழக்கில் அச்சு ஊடகங்களாக எதிர்காலத்தில் வெளிவரவேண்டும்.
இதற்காக கிழக்கிலுள்ள தனவந்தர்கள் முன்வர வேண்டும். இந்த முயற்சியில் கல்முனை ஊடக மையமும் ஆர்வத்துடன் செயற்படுவதோடு,
புதிய ஊடகத்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கவும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வுகளை வழங்கவும் முன்வர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் தேவ அதிரன் மற்றும் கல்முனை வலயமைப்பின் கே.கேதீஸ் ஆகியோருக்கு நிகழ்வில் உரையாற்றிய பலரும் பெரும்பாராட்டுத் தெரிவித்தனர்.