ஜோசப் பரராஜசிங்கம்
15வது ஆண்டு நினைவுப் பகிர்வு
மக்கள் தலைவனொருவன் மண்ணிற்கு விடைகொடுத்து பதினைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் அவர் ஆற்றிய சேவை காலத்தால் அழிந்து போகாமல் உயிர்ப்புடன் வாழ்கின்றது. ஆமாம், நாம் பறிகொடுத்த அந்தத் தலைவன்தான் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்.
தமிழர் அரசியலுக்கும் அப்பால் தேசிய அரசியலிலும் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்ட ஆளுமை அவர் என்றால் அது மிகையல்ல. 16 ஆண்டுகள் இறுதிவரை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து நமக்கு பெருமை சேர்த்த பெருந்தகை. நத்தார் பெருவிழா நெருங்கும் போதெல்லாம் ததும்பிடும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றிலும் அவர் திருவுருவம் காட்சி தருகின்றது.
1934ம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26ஆம் நாள் இந்தத் தலைவனை மண் கண்டு மகிழ்ந்தது. பல ஆளுமைகளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிதான் கல்வி வழங்கி இந்தக் கனவானையும் நமக்கீந்தது.
ஆரம்பம் ஆங்கில ஆசிரியன். அதற்கு விடைகொடுத்தவராகப் படவரைஞர் பதவி. மட்டக்களப்பு நகரிலே திரையரங்கு நிறுவி சினிமா வாணிபம். எழுத்திலே மிகையான ஈடுபாடு. அதன் நிமித்தம் பத்தி புனையும் பத்திரிகையாளன். அப்போது பிரபல்யமிக்கதாக விளங்கிய தினபதி, சிந்தாமணி நாள், வார வெளியீடுகள் அவர் எழுத்துக்களால் ஏற்றம் பெற்றன. அத்தோடு கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கத் தலைமைப் பதவியும் ஏற்று ஊடகத் துறைக்கு உயிர் கொடுத்தார்.
அக்காலத்தே திருமண பந்தம் கூடிற்று. அம்மையார் சுகுணம் அவர்களைக் கைப்பிடித்து புதுவாழ்வு புகுந்தார். இரு மனங்களும் இனிதே இணைந்த மணவாழ்வு புத்திரி ஒருவரும், புத்திரன்கள் மூவருமாக பெருவாழ்வாகப் பெருகிற்று. தேடிய அவர்கள் வாழ்வு அரசியலிலும் கூடியே நிறைவு பெற்றது.
இவ்வளவும் போதும் நாமுண்டு நமக்குண்டு வாழ்வென்று வாழ்ந்திருந்தால் மட்டக்களப்பிலென்ன முழு நாடே பேர் சொல்லிப் பேசிடும் தனவந்தராக மிளிர்ந்திருப்பார்.
ஊற்றுப் பெருக்கெடுத்து பாய்ந்தோடும் நதி திசைமாறிப் பயணிப்பது போல் அவர் வாழ்க்கைப் பயணமும் திசைமாறிற்று. இயல்பாகவே அவருக்குள் கருக்கொண்ட இனவுணர்வு உருக்கொண்டு தந்தை செல்வா பாசறைக்குள் தள்ளிவிட்டது.
அவர் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசிய அரசியல் மலர்ப் படுக்கையல்ல. சுகபோகம் அங்கில்லை. படாடோபம் பந்தாக்கள் கொண்டதல்ல. சோதனையும் வேதனையும் நிறைந்த கண்ணீரும், செந்நீரும் கரைபுரண்டோடுவதற்கப்பால் உயிர்களையும் காணிக்கையாகச் செலுத்திடும் தர்மம் நிறைந்த முட்படுக்கை அரசியல்.
மகிழ்வோடு அவ்வரசியலில் மனங்கொண்டார். முனைப்போடு முன்னின்று ஏற்றார்.
அப்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மூன்றாவது ஆண்டில் கால்பதித்த காலம். மட்டக்களப்பிலும் அதனைக் காலூன்ற வைக்க அவர் அயராதுழைத்தார்.
இன்றும் அவ்வரசியல் இங்கு வாழ்கின்றதென்றால் அதற்கு அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு நிறைந்த தியாக வாழ்வே என்றால் மிகையில்லை.
1970 களில் தமிழ்த் தேசிய அரசியல் உக்கிரமடைந்தது. அப்போது மட்டக்களப்பிலும் உருவாகிய தமிழ் இளைஞர் பேரவையின் தலைமைப் பதவியேற்றுப் பாடுபட்டார்.
அதனால் மட்டக்களப்பில் பணியாற்றிய அவர் நுவரெலியா மாவட்டத்திற்கு இடம்மாற்றப்பட்டார். பதவியைத் தூக்கியெறிந்து முழுநேர அரசியலில் முழுமூச்சாக இறங்கினார்.
1972இல் புதிதாக உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு தந்தை செல்வா அவர்கள் சமர்ப்பித்த குறைந்த பட்சக் கோரிக்கைகளையும் நிராகரித்ததனால் தந்தை அவர்கள் தான் பதவி வகித்த பாராளுமன்றப் பதவியினைத் துறந்தார்.
மாறுபட்டு, வேறுபட்டுக் கூறுபட்டு நின்ற தமிழ் அரசியல் கட்சிகளையெல்லாம் ஒன்றுகூட்டி தமிழர் விடுதலைக் கூட்டனியெனும் ஒரே குடையின் கீழ் தந்தை செல்வா ஒருங்கிணைத்தார். அக்கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக ஜோசப் பரராஜசிங்கம் தெரிவானார்.
அறவழிப்போர் உச்சம் கண்டது. சட்ட மறுப்புப் போராட்டமும் அதனால் சிறை வாழ்வுமென்று தமிழர் வாழ்வு தொடர்ந்தது. சற்றும் எதிர்பாராத விதமாக இருண்டு போன தமிழர் வாழ்வில் பேரிடி விழுந்தது போல் தந்தை செல்வா அவர்கள் கண் மூடினார்.
தமிழர் அரசியல் வேறு பாதை எடுத்தது. எங்கும் துயரமே என்றவாறு துன்பியல் இருப்புக் கொண்டது. துயருற்றோர் துயர் துடைக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை மட்டக்களப்பிற்கு வரவழைத்து அவர் இல்லத்திலே அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அரங்கேறிய துன்பியல்களையெல்லாம் அகிலம் அறிய வைத்தார். இடம்பெற்ற இன்னல்களையெல்லாம் அறிந்திட விசாரணை ஆணைக்குழுக்கள் அமைந்திட வழிவகுத்தார்.
1989இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது. ஓயாது தொடர்ந்தது அவர் சேவை. 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மிக அதிகப்படியான வாக்குகளை மக்கள் அள்ளிச் சொரிந்து தங்களது முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்தனர்.
பாராளுமன்றத்தில் கட்சியின் பிரதம கொறடாவாகவும் பணிபுரிந்தார். மூன்று மொழிகளிலும் பரிட்சயமிக்கவராக மொழி ஆளுமை கொண்டு விளங்கினார். அவரது பேச்சை முழுப் பாராளுமன்றமும் அவதானமாகக் கேட்டது. நமது மண் பெருமை பெற்றது.
வாய்மை மிகு அவ்வரசியல் தலைவனை அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள். 2004 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி தவறிப் போனபோதும் தேசிய பட்டியல் நியமனம் மூலம் உறுப்பினரானார்.
இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் மக்களிடமிருந்து அந்நியப்படாமல் மக்கள் சேவையே மகேசன் சேவையென்று உயிர் துறக்கும் வரை பணியாற்றினார்.
நத்தார் பெருவிழா நாளில் தேவன் சந்நிதானத்தில் குண்டடிபட்டு பெருக்கெடுத்த குருதி வெள்ளத்தில் கணவனும் மனைவியுமாக வீழ்ந்தனர். கைப்பிடித்த கணவன் மாண்டு போக கரம்பற்றிய மனைவி மயிரிழையில் தப்பிப்பிழைத்து கண்ணீரும் கம்பலையுமாக அந்நிய தேசத்தில் அகதியாக அல்லலுற்று வாழ்கிறார். சாய்ந்தது ஒரு சரித்திரமென்றே ஜோசப் பரராஜசிங்கம் சாகா வரம் பெற்று மக்கள் மனங்களில் வாழ்கின்றார்.
பிறருக்காகத் துன்பப்படுவோர் பாக்கியவான்கள்!.
வே. தவராஜா
மட்டக்களப்பு