திருக்கோவில் பிரதேசத்தில் 30இலட்சத்திற்கும்மேற்பட்ட பெறுமதியான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் இலட்சக்கணக்கான களப்பு மீன்கள் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இறந்த நிலையில் இலட்சக் கணக்கான களப்பு மீன்கள் கடற்கரையில் கரையொதிங்கி இருப்பதை  நேற்று புதன்கிழமை (23) அவதானிக்க முடிந்துள்ளது.

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு களப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன் இவ் மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் தூக்கி செல்வதுடன் அப் பிரதேசத்தில் தூர் நாற்றம் வீசி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகம் என பலரும் வருகை தந்தது நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச சபையின் உதவியுடன் கரையொதுங்கிய மீன்களை உடனடியாக அகற்றி பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வகையில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ஆகியோர் துரித நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவத்தினை கேள்விப்பட்டு மீனவர்கள் பொது மக்கள் என பலரும் வருகைதந்து வியப்பாக பார்வையிட்டு இருந்தனர்.

இவ் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று கி.மீற்றர் தூரத்திற்கு இலட்சக் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கி இருப்பதை அவதானிக்க கூடிய நிலையில் இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்கள் சுமார் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக கரையொதுங்கி காணப்படுவதுடன் இதன் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் இருக்கலாமென்றும்  திருக்கோவில் பிரதேசத்தில் பெரிய களப்பை நம்பி வாழும் நன்னீர் மீனவக் குடுப்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீன்கள் அதிகளவில் இறந்து கரையொதிங்கியதற்கு அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்ந்து வந்த கனமழை காரணமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ் நிலங்களில் தேங்கி இருந்த வெள்ள நீரினை வெளியேற்றம் வகையில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள இரண்டு முகத்து வாரங்கள் அகழ்ந்து விடப்பட்ட நிலையில் பெரிய களப்பில் இருந்த நன்னீர் மீன்கள் கடலுக்குள் அள்ளுண்டு சென்று உப்பு நீர் காரணமாக மீன்கள் இறந்து கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது