ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சிகையலங்கார நிலையங்களுக்கு பூட்டு

வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சகல சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சிகையலங்கார உரிமையாளர் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் சிகையலங்கார உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன் முடிவுகள் கிடைக்கப்பெற்று இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆகவே அனுமதியற்ற பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் திறப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.