மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விபத்தொன்றின் ஊடாக ஐந்து கொரனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பெரிய கல்லாற்றில் இனம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்களில் பாடசாலை மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது
அலுவல் நிமித்தமாக கொழும்பு சென்று வந்த இருவர் நே ற்று கல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியில் விபத்துக்குள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே இவர்களுக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின் வீட்டிலுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வீட்டில் உள்ளோரும் தொற்றுக்கு ள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை புலப்படவில்லையெனவும் இவர்கள் உடுபுடைவை வாங்க கல்முனைபிரதேசத்திற்கு சென்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கல்லாற்றுப்பிரதேசத்தில் அநாவசியமாக பொதுமக்களை வீதியில் நடமாடவேண்டாம் என ஆலயங்களில் உள்ள ஒலிபெருக்கி ஊடாக நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தொற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகிரித்துள்ளது.