மண்முனைப்பற்றில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு.

(ஆரையம்பதி நிருபர்)

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவி திட்டம் வழங்கும்  நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  தெரிவுசெய்யப்பட்ட  பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி திட்டம் வழங்கும்  ஆரம்ப நிகழ்வில் அமைச்சின் இணைப்புச் செயலாளர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சுரேந்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு தலா 2 ஆடுகள் வீதம் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்த அரசாங்கத்தின் ஊடாக மேலும் பலருக்கு எதிர்காலத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படுமெனவும், அதே வேளை காணி மற்றும் வீடு  அற்றவர்களுக்கும் வெகு விரைவில் இலவசமாக வீட்டினை பெற்றுக்கொடுப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.