ஆரோக்கியமான குடும்பங்கள் தான் ஆரோக்கியமான சமூகத்தின் அத்திவாரங்கள் .பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான்

இக்பால் அலி
ஆரோக்கியமான குடும்பங்கள் தான் ஆரோக்கியமான சமூகத்தின் அத்திவாரங்கள் ஆகும். குடும்பங்களில் ஏற்படும் அமைதியின்மையும் சச்சரவும் பிளவும் பிரிவினையும் சமூகத்தைப் பாதிக்கின்றன. பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அதனாலேதான் குடும்ப ஆரோக்கியம் பற்றி பலரும் அக்கறை காட்டுகின்றார்கள் என்று பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவரும்  கண்டி தாருல் ஊலூம் அரபுக் கலாசாலையின் பணிப்பாளருமான மௌலவி எச். உமர்தீன் எழுதிய “மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை நோக்கி ” என்னும் புத்தக நூல் வெளியீட்டு விழா 18-12-2020  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
சமூக அரசியல் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய கால கட்டத்தில் இத்தகைய நூல்களுக்கு ஒரு  தேவையும் முக்கியத்துவமும் உண்டு என்பதில் ஐயமுpல்லை. குடும்பம் என்பது சமூக கட்டுமானத்தின் அடிப்படையான அலகு. ஆரோக்கியமான குடும்பங்கள் ஆரோக்கியமான சமூகத்தின் அத்திவாரங்கள் ஆகும். குடும்பங்களில் ஏற்படும் அமைதியின்மையும் சச்சரவும் பிளவும் பிரிவினையும் சமூகத்தைப் பாதிக்கின்றன. பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. ஆதனாலேதான் குடும்ப ஆரோக்கியம் பற்றி பலரும் அக்கறை காட்டுகின்றார்கள். சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். குடும்பப் பிரச்சினைகளுக்கான காரணங்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் போதாது. மார்க்க அடிப்படையிலான பரிசீலனைகளும்  தீர்வுகளும் இவ்வகையில்  முக்கியமானவை.
இஸ்லாமிய நோக்கில் குடும்ப வாழ்க்கை பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலே  பல ஆலோசனைகளையும்  தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார்கள். அவ்வகையிலே  அத்தகையதொரு முயற்சி தான் மௌலவி உமர்தீன் அவர்களுடைய நூல். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கான  இஸ்லாமிய மார்க்க ரீதியான வழிகாட்டல்களை இந்த நூல் முன் வைக்கின்றது.
இன்று முஸ்லிம்சமூகத்திலே குடும்ப பிரச்சினைகள் இருந்து வருகின்றன. விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன. குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. பிள்ளைகள் அனாதரவாக அனாதை இல்லங்களில் தஞ்சமடைய வேண்டிய சூழல்  உள்ளது. கணவன் மனைவிக்கிடையிலான ஒவ்வாமை. குழப்;பங்களுமே இதற்கு காரணமாக அமைகின்றது. இந்தப் பின்னணியிலே சகோதரர் உமர்தீன் மௌலவியுடைய இந்த நூல் மிகமுக்கியமானது என்பது ஐயமில்லை. கடுகு சிறிதெனினும் காரம் பெரிது என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த நூல் அளவில்  சிறியதாயினும் பெரிய முக்கியத்துவமுடையது என்று நான் கருகின்றேன்.
இஸ்லாமிய நோக்கில் கணவன் மனைவி இருவருடைய கடமைகள்  உரிமைகள் எவை என்பது பற்றி  சுருக்கமாகவும் அழுத்தமாகவும் அவர் எழுதியுள்ளார். குடும்பம் என்றால் என்ன ? குடும்பவாழ்க்கையில்  அதிகம் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான  காரணம் எவை என்பது பற்றி சுருக்கமான விளக்கத்துடன் குடும்ப வாழ்க்கையில் கணவனின் பொறுப்பு. குடும்ப வாழ்வில் சிறப்பாக சந்தோசமாக அமைய கணவனிடம் இருக்க வேண்டியப பண்புகள் பற்றி ஒரு 12 தலைப்புகளில் சற்று விரிவாக இவர் விளக்கியிருக்கிறார்.
இறுதியா மனைவியிடம் இருக்க வேணடிய பண்புகள் பற்றி 06 தலைப்புக்களில் பயனுள்ள கருத்துக்களை சற்றுவிரிவாக முன்வைத்திருக்கிறார். அவ்வகையிலே ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தலைவியும் படிக்க வேண்டிய ஒரு கை நூல் என்று நான் இதனைக் கருதுகின்றேன்.
மௌலவி உமர்தீனின் முதலாவது நூல் எனக் கருதுகின்றேன் இது போன்று பல நூல்கள் நமக்குத்தர வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  நூல் பற்றிய கருத்துரையினை கண்டி தாருல் ஊலூம் அரபுக் கலாசாலையின் உப  அதிபர் மௌலவி எம். எச். எம். ராபி (புர்கானி) நிகழ்த்தினார்.
நூலின்   முதல் சிறப்பு பிரதியை கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ.  சித்தீக்  அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஷ்மி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.