தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்குவதில் இன்னும் தீர்மானமில்லை

பைஷல் இஸ்மாயில் –
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடந்த 26 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று நீக்கப்படலாம் என்ற விடயம் பற்றி  எந்தத் தீர்மானமும் இதுவரையும் உயர் மட்டம் கூடி முடிவு எடுக்கப்படவில்லை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் சுயதொழில், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய தொழில்களைக் கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கு என்னாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனது பிரிவில் உள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மதித்து தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எமது காரியலப் பிரிவில் இது வரையும் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர். இதில் 3 பேர்
சிகிச்சையின் பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, எமது பிரதேச மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும் என்றும் நீங்கள் ஒவ்வொருவரும் வழங்கும் ஒத்துழைப்பின் மூலம் எமது பிரதேச மக்களையும், அயல் கிராம மக்களையும், எமது நாட்டு மக்களையும் இந்த கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாக்க வழி வகுக்கும் என்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.