கிழக்கில் தீவிரமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த

களமிறங்கியது சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம். !!

நூருல் ஹுதா உமர்.

கிழக்கு மாகாணத்தில் அதி தீவிரமாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிர்வாக பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்களையும் பிராந்திய வர்த்தகர்களையும் விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது-  மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நாமும் பாதுகாப்பு பெற்று மற்றவர்களையும் காப்போம்” கொரோனாவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

எதிர்வரும் சில நாட்களில் வரவுள்ள நத்தார், புதுவருடம் போன்ற பண்டிகை வியாபாரம் ஆரம்பித்துள்ள நிலையில் “கொரோனாவை வெற்றிகொள்வோம்” எனும் தொனியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நுகர்வோரை வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற இவ்விழிப்பூட்டும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், பிராந்திய தொற்றுநோய் பொறுப்பதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவா, கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், பொதுச் சுகாதார பரிசோதர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க பொதுச் செயலாளர் எம்.எப்.ஏ. பாசித், முன்னாள் வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் யூ.எல். ஜலால் உள்ளிட்ட வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.